நாய்களுக்கான பிரத்யேக விமான சேவை வழங்கும் பார்க் ஏர் – டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

நாய்கள் விமானம் பயணம் செய்வதற்கான புதிய ஆடம்பர விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. பார்க் ஏர் என அழைக்கப்படும் புதிய விமான சேவை மே 23 ஆம் தேதி துவங்கியது. நியூ யார்க்-இன் வெஸ்ட்செஸ்டர் கவுண்டி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல் விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

நாய் பொம்மைகளை விற்பனை செய்யும் பார்க் நிறுவனம் ஜெட் சார்டர் சேவையை வழங்கும் நிறுவனத்துடன் இணைந்து பார்க் ஏர் நிறுவனத்தை துவங்கியுள்ளது. இந்த நிறுவனம் நாய்களுக்கும், அதன் உரிமையாளர்களுக்கும் பிரத்யேக பயண அனுபவத்தை வழங்குகிறது.

முந்தைய விமான பயணத்தை போன்று, இந்த நாய்களை யாரும் குறைத்து மதிப்படவோ அல்லது கார்கோ போன்றோ நடத்தவில்லை. மேலும், இவைகள் மற்ற பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு தொல்லையாகவும் இருக்கவில்லை. இங்கு, நாய்களுக்குத் தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இங்குள்ள ஒவ்வொரு வசதியும், நாய்களுக்கு சவுகரியமாக இருக்குமா? என்ற அடிப்படையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன என்று பார்க் ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாய்கள் பயணிக்கும் இந்த விமானத்தில், அவைகளுடன் அதன் உரிமையாளர்களும் பயணம் செய்யலாம். தற்போது முதற்கட்டமாக இந்த சேவை நியூ யார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் இடையே, ஒருவழி மற்றும் இருவழி பயணமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பயணத்திலும் 15 நாய்களும், அதன் உரிமையாளர்களும் பயணம் செய்யலாம்.

செளகரியான பயணத்தை உறுதி செய்யும் வகையில், ஒரு பயணத்தில் அதிகபட்சம் 10-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதில்லை. இந்த விமானத்தில் உள்நாட்டு பயணத்திற்கு 6 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 4 லட்சத்து 98 ஆயிரத்து 352 என்றும் சர்வதேச பயணத்திற்கு 8 ஆயிரம் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 6 லட்சத்து 64 ஆயிரத்து 470 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here