இந்தியாவின் இளம் எம்பி இவர்தான்! யார் இவர்? எப்படி சாதித்தார்?

பீகார்: இந்தியாவின் இளம் எம்பி என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சாம்பவி சவுத்ரி. யார் இவர்? எப்படி சாதித்தார்?. இந்த மக்களவைத் தேர்தல் பீகார் மாநிலத்தைப் பல வகைகளில் பிரபலமாக்கி உள்ளது. இந்தியா கூட்டணியை உருவாக்கியவர்களில் ஒருவரான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் மாநில முதல்வருமான நிதிஷ்குமாரால் சில மாதங்கள் பீகார் ஹைலைட் ஆனது. அவர் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கி வைத்த ‘இந்தியா’ கூட்டணியைத் தூக்கி எறிந்துவிட்டு, அவர் பாஜக கூட்டணிக்குச் சென்றார். உருவாக்கியவரே போய்விட்டார்.

இனிமேல் இந்தக் கூட்டணி சிதைந்துவிடும் எனப் பல ஊகங்கள் முளைத்தன. அவர் இல்லை என்றாலும் ‘இந்தியா’கூட்டணி வலிமையாகவே உள்ளது எனப் பல தலைவர்கள் மறுப்பு தெரிவித்து வந்தனர். ஆக, தேர்தல் காலம் வரை நிதிஷ்குமாரைச் சுற்றியே இந்தியத் தேர்தல் களம் இருந்தது.இப்போது தேர்தல் முடிந்த பிறகும் அவர்தான் ஹைலைட் ஆகி இருக்கிறார்.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அவர் இந்திய அரசியலில் கிங் மேக்கர் ஆகியுள்ளார்.அவரது கட்சிக்கு புதியதாக அமைய உள்ள என்.டி.ஏ அமைச்சரவையில் சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இல்லை எனில் அவர் சக்தி வாய்ந்த மத்திய அமைச்சர் பொறுப்புக்கு முன்னேற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.அவருக்குப் பதிலாகப் பீகாரில் வேறு ஒருவரை முதல்வராக அமர்த்திவிட்டு, இனி நிதீஷ் தேசிய அரசியலில் ஈடுபடலாம் என்றும் பேச்சுகள் வலு சேர்த்து வருகின்றன.

அடிக்கடி கூட்டணி விட்டு கூட்டணி மாறக்கூடிய அவர், மீண்டும் இந்தியா கூட்டணிக்குத் திரும்பலாம் என்றும் சொல்கிறார்கள். ஆக, பீகார் மாநிலம் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கப் போகும் இரண்டு மாநிலங்களில் ஒன்றாக மாறியுள்ளது. தேர்தலுக்கு முன்பே நிதிஷ்குமாரால் கவனம் பெற்ற பீகார், இப்போது தேர்தல் முடிவுக்குப் பிறகு இன்னொரு விசயத்திற்காக ஒட்டு மொத்த இந்தியாவையும் ஈர்த்துள்ளது. இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிலேயே மிக இளம் உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றுள்ள சாம்பவி சௌத்ரி பீகாரைச் சேர்ந்தவர்தான். இவர் ராம்விலாஸ் பஸ்வான் கட்சியான லோக் ஜன சக்தி கட்சியின் சார்பில் பீகாரில் உள்ள சமஸ்திபூர் தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆகியுள்ளார்.

இவரது கட்சி நிதிஷ்குமார் பங்கேற்றுள்ள என்டிஏ கூட்டணி இடம்பெற்றுள்ளது. இவருக்காக மோடி பிரச்சாரத்தில் பங்கேற்ற போதே சாம்பவி வைரலானார். சாம்பவி சௌத்ரி 579786 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியடைந்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சன்னி ஹசாரியை விட 187251 வாக்குகளை அதிகம் பெற்றுள்ளார் இவர். இந்தளவுக்கு இளம் அரசியல்வாதியான இவர் யார்? சாம்பவி சவுத்ரிக்கு இப்போது 25 வயது. இவர் அவரது குடும்பத்தில் மூன்றாம் தலைமுறை அரசியல்வாதி. இவரது தந்தை அசோக் சவுத்ரி ஜேடியு தலைவர். நிதிஷ்குமார் அமைச்சரவையில் செல்வாக்கு மிக்க அமைச்சர்களில் இவரும் ஒருவர். இவர் காங்கிரஸிலிருந்து ஜேடியூவுக்கு கட்சி மாறினார். சாம்பவி சவுத்ரியின் தாத்தா, மகாவீர் சவுத்ரியும் காங்கிரசிலிருந்தவர். பீகாரில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தபோது மாநில அமைச்சராக இருந்தார். இத்தனை அரசியல் செல்வாக்கு உள்ள குடும்பத்தைச் சேர்ந்த சாம்பவி இப்போது ராம்விலாஸ் பஸ்வான் கட்சியில் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

ஆகவேதான் பீகாரில் நடந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி அவருக்குப் பாராட்டு தெரிவித்திருந்தார். சாம்பவி சவுத்ரி தனது வெற்றிக்குப் பிறகு பிடிஐயிடம், “சமஸ்திபூர் மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் சரியான முடிவை எடுத்துள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ நான் முயற்சிப்பேன். சமஸ்திபூர் எனக்கு ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது. இன்று அவர்கள் என்னை மகளாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அவர்களின் இதயத்தில் நான் இடம் பிடித்துள்ளேன்” என்று தெரிவித்தார். சாம்பவி சௌத்ரி, புகழ்பெற்ற டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் முதுகலை (சமூகவியல்) படித்துள்ளார் என்பது கூடுதல் செய்தி. “எனக்கு அரசியலையும் சமூகத்தையும் புரிந்துகொள்வது கடினமான வேலையல்ல. அரசியலில் சேர்ந்ததே நான் படித்த அனைத்து விஷயங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். எனது கல்விப் பின்னணி நிச்சயமாக எனது பகுதியில் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கண்டறிய உதவும்” என்று செளத்ரி கூறினார். இவர் சமூக சீர்திருத்தவாதியும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான ஆச்சார்யா கிஷோர் குணால் என்பவரின் மருமகள் ஆவார். இவர் சயான் குணால் என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here