மலாக்காவில் தைப்பூசம்: ஒற்றுமை, கருணை, பரஸ்பர மரியாதையின் அடையாளம் – முதல்வர்

( ரெ.மாலினி)

மலாக்கா மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரவுப் யூசோப், தைப்பூசம் என்பது வெறும் மத விழா அல்ல; மலாக்காவின் பன்முக சமூகத்தை இணைக்கும் ஒற்றுமை, கருணை மற்றும் பரஸ்பர மரியாதையின் பிரதிபலிப்பு என தெரிவித்துள்ளார்.

தைப்பூச வாழ்த்துச் செய்தியில், அனைத்து இன மற்றும் மத சமூகங்களிடையேயான நல்லிணக்கத்தை பாதுகாக்க மாநில அரசு முழுமையாக உறுதியாக இருப்பதாக அவர் கூறினார். பிரிவினை உண்டாக்கும் எதிர்மறை கருத்துக்களை நிராகரித்து, பரிவு மற்றும் புரிதலை வளர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“ஒவ்வொருவரும் மதிக்கப்படுவதாகவும் மாநில முன்னேற்றத்தில் பங்கெடுக்க வல்லவர்களாகவும் உணரும் போதே உண்மையான ஒற்றுமை உருவாகும். மலாக்காவின் பலமே அதன் பல்வகை தன்மையே,” என்றார் அவர்.

இந்த ஆண்டின் தைப்பூச விழாவில் சுமார் 50,000 பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பத்து பெரண்டாம் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் முக்கிய மையமாக இருக்கும் நிலையில், ஜாசின் மற்றும் அலோர் காஜா பகுதிகளிலும் விழா கொண்டாடப்படும்.

மேலும், தைப்பூச வழிபாடுகளில் பங்கேற்க வசதியாக, மலாக்காவில் பணியாற்றும் இந்து அரச ஊழியர்களுக்கு பிப்ரவரி 2 (திங்கள்) அன்று விடுப்பு வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here