மலேசியாவின் தரவு நிலையங்களுக்கு அதிக மின்சாரம், தண்ணீர் தேவைப்படலாம் -ஆய்வு

கோலாலம்பூர்:

தரவு நிலையங்களை ஏற்படுத்துவதற்கான பல மில்லியன் டாலர் முதலீடுகளை நோக்கிய மலேசியாவின் நடவடிக்கை இனி வரும் ஆண்டுகளில் தண்ணீர் மற்றும் மின்சார விநியோகங்களுக்கு இடையூறாக அமையலாம் என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

குறிப்பாக, தொழில்துறை மாநிலங்களான ஜோகூர் மற்றும் சிலாங்கூரில் அந்தப் பாதிப்பை எதிர்நோக்கலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

தரவு நிலையங்களுக்குத் தேவைப்படும் மின்சாரத்தின் அளவு வரும் 2035ஆம் ஆண்டுவாக்கில் 5,000 மெகாவாட் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய மின்விநியோகிப்பு நிறுவனமான TNB இதனை மதிப்பிட்டு உள்ளது.

தரவு நிலையங்களின் அளவு அவை நுகரும் மெகாவாட் மின்சாரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

இருப்பினும் புதிய தரவு நிலையங்களுக்குத் தேவைப்படும் மின்சாரத்தின் அளவு தற்போதைய நிலவரத்தைக் காட்டிலும் மிகவும் அதிகம் என்பதை மின்விநியோகம் கேட்டு வரப்பெற்ற விண்ணப்பங்கள் உணர்த்துகின்றன.

விண்ணப்பங்களின் அடிப்படையில் 11,000 மெகாவாட்டுக்கும் மேல் மின்சாரம் தேவைப்படும் என்று ஆஃபின் ஹுவாங் கேப்பிட்டல் நிறுவனத்தின் அண்மைய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்த அளவு மலேசியாவின் தற்போதைய மின் உற்பத்தியான 27,000 மெகாவாட்டில் 40 விழுக்காட்டுக்கும் மேல்.

இதற்கிடையே, 100 மெகாவாட் மின்சாரத்தைப் பயன்படுத்தும் தரவு நிலையங்கள் ஏறக்குறைய 1.1 மில்லியன் காலன் நீரை தினமும் குளிர் சாதன பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்துவதாக லாரன்ஸ் பெர்கிலே தேசிய பரிசோதனைக்கூடத்தின் ஆய்வு தெரிவித்து உள்ளது.

நாள் ஒன்றுக்கு 10,000 மக்களைக் கொண்ட ஒரு நகரத்தின் தண்ணீர் தேவையைச் சமாளிக்கக்கூடியது இந்த அளவு என்பதும் தெரிய வந்து உள்ளது.

தரவு நிலையங்களை ஏற்படுத்துவதற்கான மலேசியாவின் முதலீடு 2021 ஜனவரிக்கும் 2023 மார்ச்சுக்கும் இடைப்பட்ட காலத்தில் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here