இலக்கு சார்ந்த உதவித்தொகை நாட்டைக் காப்பாற்றும் என்கிறார் பிரதமர்

கோலாலம்பூர்:

இலக்கு சார்ந்த உதவித்தொகைக்கு மலேசியர்களிடையே போதுமான வரவேற்பு இல்லாதபோதிலும் நாட்டைக் காப்பாற்ற அது மிகவும் அவசியம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

“இலக்கு சார்ந்த உதவித்தொகை அணுகுமுறையை நடைமுறைப்படுத்த யார்தான் விரும்புவார்கள்? நாங்கள் என்னதான் செய்தாலும் எங்களுக்கு எதிராகப் பொய்களைப் பரப்புவோர் இருக்கத்தான் செய்வார்கள்.

“இலக்கு சார்ந்த உதவித்தொகையை நடைமுறைப்படுத்த எனக்கு முன்பு பிரதமராக இருந்தவர்கள் அனைவரும் இணக்கம் தெரிவித்திருந்தனர். ஆனால் அதை நடப்புக்குக் கொண்டு வர அரசியல் ரீதியான முனைப்பு இல்லை.

“நாட்டைக் காப்பாற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு வேறு வழி இல்லை,” என்று நேற்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திரக் கூட்டத்தில் பிரதமர் அன்வார் கூறினார்.

இதன்மூலம் அதற்கு உதவி தேவைப்படாதோருக்கும் உதவி பெற தகுதி பெறாதோருக்கும் தேவையின்றி உதவி செல்வதைத் தடுக்க முடியும் என்று மலேசியாவின் தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபட்சில் தெரிவித்தார்.

இலக்கு சார்ந்த உதவித்தொகை வழங்குவதன் மூலம் நிதி உதவி தேவைப்படாதவர்களுக்கு அது தேவையின்றி சென்றடைவதைத் தவிர்க்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

இதன் விளைவாக உதவித் திட்டங்களும் மலேசியர்களின் வருமானமும் உயரும் என்றார் அவர்.

டீசல் உதவித்தொகை காரணமாக மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறைக்கு நாள்தோறும் 1.25 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதை அவர் சுட்டினார்.

உதவித் தேவைப்படாதோருக்கும் டீசல் உதவித்தொகை சென்றடைவதாலும் டீசல் கடத்தல் காரணமாகவும் இழப்பு ஏற்பட்டதாக அவர் கூறினார்.

இலக்கு சார்ந்த உதவித்தொகை மூலம் இந்த நிலைமை தவிர்த்து உதவித் தேவைப்படும் மலேசியர்களுக்குக் கூடுதல் திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம் என்று அமைச்சர் ஃபாமி மேலும் கூறினார்.

இதற்கிடையே, உதவித்தொகை மறுசீரமைப்புக்கு அம்னோவின் இளைஞர் அணித் தலைவர் டாக்டர் முகமட் அக்மால் சாலே ஆதரவு தெரிவித்துள்ளார்.

இலக்கிடப்பட்ட உதவித்தொகை அணுகுமுறையை இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த தேசிய முன்னணி அரசாங்கம் பலமுறை பரிந்துரை செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

ஆனால் அதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஜூன் 3ஆம் தேதிக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட டீசல் உதவித்தொகை விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான தொகை ஜூன் 10ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்று மலேசியாவின் இரண்டாம் நிதி அமைச்சர் அமிர் ஹம்சா அஸிஸான் முன்னதாகத் தெரிவித்தார்.

முதற்கட்டமாக 30,000 பேருக்கு 200 ரிங்கிட் உதவித்தொகை கிடைக்கும் என்று அவர் கூறினார்.

இந்நிலையில், விதிமுறைக்கு உட்பட்ட டீசல் விற்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய ஜோகூர் மாநிலத்தில் இருக்கும் 11 பெட்ரோல் நிலையங்களில் மலேசியாவின் உள்நாட்டு வர்த்தக, விலைவாசி அமைச்சின் அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here