ஈப்போ:
அன்ஜுங் பெர்சாம், டத்தாரான் தசெக் திமூரில் உள்ள அவரது வீட்டின் பிரதான அறையில் இறந்து கிடந்த மூதாட்டி, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
ஆரம்பத்தில் திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்ட இந்த வழக்கு, இப்போது தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன் படி விசாரிக்கப்படுகிறது என்று, ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அபாங் ஜெய்னால் அபிடின் அபாங் அமாட் கூறினார்.
“ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் (HRPB) தடயவியல் துறையின் பிரேதப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், அழுத்தமான பொருளால் தாக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சி, மற்றும் தலை, கழுத்து என்பவற்றில் ஏற்பட்ட காயங்களின் விளைவாக 60 வயதான அந்த மூதாட்டிக்கு மரணம் ஏற்பட்டதாக உறுதிப்படுத்தியது. ,” என்று அவர் நேற்று இரவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
முன்னதாக, இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைக்காக பாதிக்கப்பட்டவரின் 36 வயது மகனை போலீசார் கைது செய்து, விளக்கமறியலில் வைத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.