பி.ஆர்.ராஜன்
மலேசிய தமிழர்களின் வரலாற்றுப்பூர்வ ஆவணங்கள், பாரம்பரிய பொருட்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்துவதற்கு ஓர் அருங்காட்சியகம் அமைக்கும் முயற்சியில் சிலாங்கூர் தமிழர் ஆர்க்கிப் சங்கம் களம் இறங்கியிருக்கிறது என்று அதன் தோற்றுநர், தேசியத் தலைவர் டாக்டர்என்.ஏ.சண்முகநாதன் தெரிவித்தார்.
பல நூறு ஆண்டுகளாக மலேசிய மண்ணில் தமிழர்கள் காலூன்றி இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அரும்பாடாற்றி இருக்கின்றனர்.
பால் மரம்சீவுதல் தொடங்கி காடுகளை அழித்து மிகப் பிரமாண்டமான சாலைகள், தண்டவாளங்கள் நிர்மாணிப்பு ஆகியவற்றிலும் இவர்களின் பங்களிப்பும் உழைப்பும் வரலாற்றுப்பூர்வமானதாகும்.
மலேசிய தமிழர்கள் அவர்களின் வாழ்க்கையில் பயன்படுத்திய அனைத்து வகையான பொருட்களையும் கலை, கலாச்சார கூறுகளையும் பாரம்பரிய அம்சங்களையும்ஒரு காட்சியகம் அமைத்து தகுந்த விளக்கத்துடன் அதில்காட்சிப்படுத்தி, ஒரு புதிய வரலாற்றை பதிவு செய்யும் அரிய முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக அவர் சொன்னார்.
இந்த பாரம்பரிய காட்சியகம் இன்றைய தலைமுறைக்குஅன்றைய தமிழர்களின் வாழ்க்கை நெறிமுறைகளை மிகச்சரியாக புரிந்து கொண்டு தெளிவுபெற வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
மலேசிய தமிழர்கள் வியர்வை, ரத்தம் சிந்தி இந்த நாட்டைவளப்படுத்தி இருக்கின்றனர். அவர்களின் அடையாளம்அழிந்து போகக் கூடாது. மறக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் இத்திட்டம் கையில் எடுக்கப்பட்டிருக்கிறது என்று டாக்டர் சண்முகநாதன் குறிப்பிட்டார்.
தம்முடைய இந்த முயற்சிக்கு மக்கள் ஓசை கரம் சேர்ந்திருக்கிறது. மக்கள் ஓசையின் ஒத்துழைப்போடு நாடுமுழுவதும் இருந்து திரட்டப்படும் அரிய பொருட்கள்வரலாற்றுப்பூர்வமான மேலும் கலாச்சார அம்சங்களை கொண்டிருக்கும் கருவிகள், அம்சங்கள் பாரம்பரிய காட்சியகத்தில் வைக்கப்படும்.

மலேசியத் தமிழர்களின் வரலாறு மறக்கப்படக்கூடாது. ஏழைகளாக வந்தவர்களின் உழைப்பையும் நாட்டிற்கான பங்களிப்பும் மறைக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இத்திட்டத்திற்கு மலேசியத் தமிழர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
சங்கத்தின் இந்த முயற்சிக்கு ஆர்க்கிப் நெகாரா மலேசியாவும் ஒத்துழைப்பு நல்குவதற்கு முன் வந்திருக்கும் தகவலையும் அவர் தெரிவித்தார். இதுபோன்ற திட்டங்களை ஆர்க்கிப் நெகாரா ஊக்குவிக்கிறது என்று அதன் தலைமை இயக்குநர் டத்தோ ஜாபார் சிடேக் ஹாஜி அப்துல் ரஹ்மான் 2024 மார்ச் 26 என தேதியிடப்பட்ட ஒரு கடிதத்தில் தெரிவித்திருக்கிறார் என்று அவர் சொன்னார்.
இதனிடையே சிலாங்கூர் மாநில அரசாங்கமும் இந்த காட்சியகம் அமைப்பதற்கு ஓர் இடத்தை தருவதற்கு கொள்கையளவில் ஒப்புதல் தெரிவித்திருப்பதாகவும் டாக்டர் சண்முகநாதன் கூறினார்.
























