கோலாலம்பூர்:
‘மலேசியா எனது இரண்டாவது வீடு’ (MM2H) எனும் திட்டத்தின் கீழ் வரும் புதிய பங்கேற்பாளர்கள், நிரந்தரவாசத்துக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற மாட்டார்கள் என்று மலேசிய சுற்றுலா, கலை, கலாசார அமைச்சர் தியோங் கிங் சிங் தெரிவித்தார்.
இந்தத் தகவலை பெர்னாமா செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்தது.
MM2H திட்டத்தில் உள்ள பிளாட்டினம், கோல்ட், சில்வர் ஆகிய மூன்று பிரிவுகளுக்கும் இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நேற்று சனிக்கிழமை (மே 15) வெளியிட்ட ஓர் ஃபேஸ்புக் பதிவில், MM2H திட்டத்தின் புதிய பங்கேற்பாளர்களுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அவர் அறிவித்திருந்தார்.
புதிய அணுகுமுறையால் இலக்கு வைக்கப்பட்டவர்களை அதிகம் ஈர்க்க முடியும் என தமது அமைச்சு நம்புவதாகவும் அவர் சொன்னார்.
குறிப்பாக, நிகர சொத்து மதிப்புடைய தனிப்பட்டவர்கள், முன்னணி மின்னிலக்க தொழில்நுட்ப நிபுணர்கள் போன்றோருக்கு அவர்கள் விரும்பும் முதல் இடமாக மலேசியாவை ஆக்குவது MM2H திட்டத்தின் நோக்கமாகும்.
இத்தகைய பிரிவினர் இருப்பதால் உள்ளூர் பொருளியல் மேம்படும் என்பது மலேசியாவின் எதிர்பார்ப்பாகும்.
குறிப்பாக, சுற்றுலா, வீடமைப்பு, கல்வி, மருத்துவத் தொழில்களில் மலேசியாவை போட்டிமிகுந்த உலகளாவிய மையமாக்கும் என்று அமைச்சர் தியோங் குறிப்பிட்டார்.
கடந்த 2002ஆம் ஆண்டில் எம்எம்2எச் திட்டம் அறிமுகமானது. இது, மலேசியாவில் சொத்து வாங்கி வசிக்க வெளிநாட்டவர்களை அனுமதிக்கிறது. 2020 ஆகஸ்டில் இந்தத் திட்டத்தை சுற்றுலா, கலை, கலாசார அமைச்சு பரந்த அளவில் பரிசீலிப்பதற்காக உள்துறை அமைச்சு, தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தது.
2021 அக்டோபரிலிருந்து MM2H திட்டத்தின் புதிய விண்ணப்பங்களை குடிநுழைவுத் துறை பரிசீலித்து வருகிறது.
குறிப்பிட்ட விதிமுறைகள், நிபந்தனைகள் அடிப்படையில் MM2H விண்ணப்பதாரர்கள், ‘கோல்ட்’, ‘சில்வர்’, ‘பிளாட்டினம்’ என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுவார்கள்.
மலேசியாவுடன் குறைந்தது 25 ஆண்டுகள் அரசதந்திர உறவு வைத்துள்ள நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்க முடியும். MM2H ஒரே இட சேவை நிலையத்தில் எல்லா விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஆண்டுக்கு 90 நாள்கள் இவர்கள் மலேசியாவில் தங்கியிருக்க வேண்டும். ‘பிளாட்டினம்’ பிரிவுக்கு ஒரு மில்லியன் யுஎஸ் டாலர், ‘கோல்ட்’ பிரிவுக்கு 500,000 யுஎஸ் டாலர், ‘சில்வர்’ பிரிவுக்கு 150,000 யுஎஸ் டாலரை நிலையான வைப்புத் தொகையாக கொண்டிருப்பது மிக முக்கியம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.