தி.மோகன்
பெட்டாலிங்ஜெயா:
இவ்வாண்டு ஜூலை அக்டோபர் மாதங்களில் நடத்தப்படும் சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டின் வழி 7 பில்லியன் ரிங்கிட்
மதிப்பிலான முதலீடுகள், வர்த்தகங்களை ஈர்க்க முடியும் என இன்வெஸ்ட் சிலாங்கூர் நம்பிக்கை கொண்டுள்ளது.
இந்த 2 மாநாடுகளும் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது. முதல் மாநாடு ஜூலை 25ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரையில் நடத்தப்படும்.
அதனைத் தொடர்ந்து 2ஆம் மாநாடு அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரையில் நடத்தப்படுகின்றது. இந்த மாநாடுகளில் 80 நாடுகளைச் சேர்ந்த 60,000க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாடுகளை சிலாங்கூர் மாநில அரசாங்கம் இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் நிறுவனத்தின் வாயிலாக ஏற்பாடு செய்து நடத்துகிறது என மாநில முதலீட்டு, வர்த்தக ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்தார்.
முதல் மாநாட்டில் சிலாங்கூர் ஆசியான் வர்த்தகக்கூட்டம், சிலாங்கூர் தொழில்துறை -முதலீட்டு பூங்கா ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்தப்படும். அதனைத் தொடர்ந்து 2ஆவது மாநாட்டில் சிலாங்கூர் அனைத்துலக கண்காட்சி (உணவு- பானம்), சிலாங்கூர் வாழ்வாதார அறிவியல் மாநாடு, ஆக்கப்பூர்வ நகர் மாநாடு, சிலாங்கூர் டிஜிட்டல் பொருளாதார மாநாடு ஆகியவை இடம்பெறும்.
ஒருங்கிணைந்த செயல்பாடுகள், தற்போதைய பொருளாதார சூழலை வைத்து பார்க்கும்போது கடந்த ஆண்டு பெற்ற முதலீட்டு – வர்த்தக வாய்ப்புகளை காட்டிலும் இவ்வாண்டு அதிகளவில் 7 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான முதலீட்டு -வர்த்தக வாய்ப்புகளைப் பெற முடியும் எனவும் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
இந்த மாநாட்டில் சிலாங்கூர் மாநில மந்திரிபெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, பினாங்கு முதல்வர் சௌ கோன் இயோ, முதலீட்டு -வர்த்தக -தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஸப்ருல் ஆகியோர் முதன்மை பேச்சாளர்களாக இருப்பர்.
அதுமட்டுமன்றி முதல்முறையாக தீமோர் லெஸ்தேவை சேர்ந்த பேச்சாளரும் இதில் பங்கேற்பார் என நேற்று இந்த மாநாடுகளுக்கான அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸி ஹான் விவரித்தார்.