திரையுலகில் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறேன்: நடிகர் விதார்த்

சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கி விருதுகள், அனைத்துலக விழாக்கள் ஆகியவற்றில் திரையிடும் படங்களின் கதாநாயகனாக ஒளிர்கிறார் விதார்த்.

அண்மையில் குங்குமம் வார இதழுக்கு அவர் அளித்த நேர்காணலில், “24 ஆண்டுகள் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை. முழுமையாக திரையுலகைப் பற்றி நான் கற்றுக்கொண்டேன் என்றால் நான் இந்த இடத்தை விட்டு எப்போதோ சென்றிருப்பேன். ஒரு கலையை யாரும் முழுமையாகக் கற்று அதில் தேர்ச்சி பெற்றுவிட முடியாது. அப்படித் தான் நானும்,” என்றார் விதார்த்.

மேலும், லாந்தர் படம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, “படம் முழுக்க ஒரே இரவில் நடக்கும் கதை. அந்தப் படத்தில் நான் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறேன். ஆனால், அந்தப் படத்தில் அதிரடி சண்டைக் காட்சிகள் எதுவும் இருக்காது,” எனக் கூறினார்.

லாந்தர் படத்தில் வேறொருவர் நாயகனாக நடிக்க வேண்டியிருந்தது எனவும் அவர் நடிக்காமல் போகவே இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு தன்னிடம் வந்ததாகவும் விதார்த் தெரிவித்தார்.

“இப்படத்தின் இயக்குநர் ஷாஜி சலீமுடன் ஏற்கெனவே ‘நான் விடியும் வரை காத்திரு’ எனும் படத்தில் பணியாற்றி இருக்கிறேன். அந்தப் படத்தின் படப்படிப்பு இன்னும் ஏழு நாள்கள் மீதம் இருக்கிறது,” என அவர் சொன்னார்.

“தொழில், ஆசை, கனவு இதையெல்லாம் தாண்டி திரையுலகை நான் அதிகமாக நேசிக்கிறேன். எனக்கும் அதற்கும் ஒரு ஆழமான பந்தம் இருக்கிறது. ஏதாவது சாதிக்க வேண்டும் எனும் எண்ணத்தில் திரையுலகில் நுழைந்தவன் நான், என்னைத் தொடர்ந்து இயங்க வைப்பது திரைப்படங்கள் தான்.

“ ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் நான் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறேனோ அந்தக் கதாபாத்திரமாகவே நான் மாறிவிடுவேன். முதல் படத்தின் கதாபாத்திரத்திலிருந்து நான் மாற வேண்டும் என்றால் அடுத்த அப்படத்தின் கதாபாத்திரம் எனக்குள் வந்தாக வேண்டும்.

“இப்படி என்னுடைய நிஜ வாழ்க்கையிலும் என்னுடைய கதாபாத்திரங்கள் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றன விதார்த் என்று என்னை அழைப்பதை விட சர்க்கார், சுருளி, அரவிந்த் என என்னுடைய கதாபாத்திரங்களின் பெயர்களைக் கொண்டு அழைத்தால் இன்னும் நான் உயிர்ப்பாய் உணர்வேன்.

“ஒரு நடிகனாக எனக்குக் கிடைக்கும் அங்கீகாரம் அது,” என்றார் விதார்த்.

இளைஞர்களுக்கு உங்களின் அறிவுரை குறித்த கேள்விக்கு,” யாருக்கும் அறிவுரை சொல்ல வேண்டிய தேவை இல்லை. சரியாக சொல்லிக் கொடுத்தால் சின்ன குழந்தைகள் கூட அவ்வளவு அற்புதமாக நடிக்கிறார்கள். நானே பார்த்து இருக்கிறேன். தற்போது திரையுலகில் நுழையும் அனைவரும் திறைமைசாலிகளாகவும் திரையுலகைப் பற்றி நன்கு அறிந்தும் உள்ளனர்,” என பதிலளித்தார் விதார்த்.

மேலும், அவர்களிடமிருந்து தான் நான் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என அவர் கூறினார்.

‘குற்றமே தண்டனை’ படத்தின் எழுத்தாளர் ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் காகங்கள் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் விதார்த். இந்தப் படங்கள் இல்லாமல் ‘வைப்பர்’, ‘மூன்றாம் கண்’, ‘சீமதண்ணி’,’காட்டுமல்லி’ உள்ளிட்ட படங்களில் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றார் விதார்த்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here