புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தின் கோராபுட் மாவட்டத்தில் உள்ள படேகுடா கிராமத்தில் ஆந்த்ராக்ஸ் நோய்ப் பரவல் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ராயகடா மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி அலுவலகம் அளித்துள்ள தகவலில், கிராமத்தில் இரண்டு பேர் ஆந்த்ராக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு நபர்களின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டதில் இரண்டு மாதிரிகளில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோராபுட் மாவட்டம் ஆந்த்ராக்ஸின் மையமாக உள்ளது என்றும் இந்த நோய் பொதுவாக மழைக்காலத்தின் தொடக்கத்தில் காணப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. ஆந்த்ராக்ஸ் என்பது விலங்குகள் வழி பரவும் ஒரு நோயாகும். கிருமித்தொற்று விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது, அழுகிய இறைச்சியைச் சாப்பிடுவதால் பாதிப்பு ஏற்படுகிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.



















