சிரம்பான்:
போக்குவரத்திற்கு எதிராக வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் 54 வயதான லோரி ஓட்டுநர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான 51 வினாடிகள் கொண்ட வீடியோ வைரலாக பரவியதையடுத்து, குறித்த ஓட்டுநரது லோரியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர் துணை ஆணையர் முகமட் ஹட்டா சே தின் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 5) காலை 11.40 மணியளவில் சிரம்பான் 2 இல் உள்ள டாத்தாரான் சென்ட்ரியோ அருகே ஜாலான் பெர்சியாரன் எஸ் 2/3 இல் இந்த சம்பவம் நடந்ததாக அவர் கூறினார்.
“விசாரணையில், அந்த நபர் பொருட்களை அனுப்பும் பணியில் இருப்பதாகவும், அந்த பகுதி தனக்கு அறிமுகம் இல்லாததால் GPS ஐ பின்பற்றியதாகவும் கூறினார்,” என்று அவர் இன்று வெளியுட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 42(1)ன் கீழ், கவனக்குறைவாக வாகனம் ஓட்டினால், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் RM5,000 முதல் RM15,000 வரை அபராதமும் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.