ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் கொரில்லாச் சிலையைத் திருடியதாக ஆடவர் ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். அந்த 1.5 மீட்டர் உயரமான சிலையின் பெயர் கேரி. சென்ற மாதம் (ஜூன் 2024) 6ஆம் தேதி அது ‘லீத் பார்க்’ மூத்தோர் வட்டாரத்திலிருந்து காணாமற்போனது. கேரி வாகனத்தில் கடத்தப்பட்டதாகக் காவல்துறை சந்தேகித்தது.
அந்த வட்டாரக் குடியிருப்பாளர்கள் பலரும் வருத்தம் தெரிவித்ததாக The Guardian செய்தி நிறுவனம் கூறியது. சென்ற திங்கட்கிழமை (1 ஜூலை) ஒருவரின் வீட்டிற்கு வெளியே சிலை கண்டுபிடிக்கப்பட்டது. அந்தச் சிலையை எதற்காகத் திருட வேண்டும் என்ற கேள்விக்குப் பதில் இல்லை எனக் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார். சிலையைத் திருடியதாக 33 வயது ஆடவர் அவராகவே முன்வந்து காவல்துறையிடம் ஒப்புக்கொண்டதாக The Guardian சொன்னது.





















