வீட்டுக் கூரை பறந்தது: 24 மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது

கடுமையான புயலில் ஒரு வீட்டின் கூரை முற்றாக சேதமடைந்தது. பத்துகாஜா, பெம்பானிலுள்ள அந்த வீட்டின் கூரையை பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ. சிவகுமார், பத்துகாஜா நாடாளுமன்ற மக்கள் சேவை மையம், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து 24 மணி நேரத்தில் சரி செய்தனர்.

தன்னுடைய வீடு பெரும் சேதத்திற்குள்ளாகி இருக்கிறது. வீட்டின் கூரை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று வீட்டு உரிமையாளர் குணசேகரன் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட்டதில் 24 மணி நேரத்தில் அந்த வீடு பழுது பார்க்கப்பட்டது என்று சிவகுமார் குறிப்பிட்டார்.

ஒற்றுமையின் வலிமையை இந்த துரித பணி நிரூபித்திருக்கிறது.  அந்த வீட்டின் கூரையைப் பழுது பார்ப்பதில் தங்களோடு அண்டை அயலாரும் பங்கேற்றதால் விரைந்து அப்பணி செய்து முடிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

அண்டை அயலாருடன் அணுக்கமான தொடர்பும் ஒத்துழைப்பும் இருந்தால் பேரிடர் காலங்களில் பிரச்சினைகளுக்கு அல்லது பாதிப்புகளுக்கு விரைந்து தீர்வு காண முடியும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சிறந்த சான்று என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஒரு புயல் இங்கு வாழும் மக்களை ஒன்றிணைத்திருக்கிறது. பாதிப்புக்கும் விரைந்து தீர்வு காண்பதற்கு வகை செய்திருக்கிறது.  தலைவர்கள், பொதுமக்கள் இடையிலான ஒத்துழைப்பு வலுப்பட்டால் எந்த சவாலையும் எளிதாக எதிர்கொண்டு சமாளித்துவிடலாம் என்று சிவகுமார் சொன்னார்.

இதனிடையே, இப்படி ஒரு பேரிடரை தான் எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்ட குணசேகரன், விரைந்து கரம் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார், அண்டை அயலாரின் ஒத்துழைப்புக்கும் உதவிகளுக்கும் நன்றி சொல்வதாகக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here