புக்கிட் மெர்தாஜம்:
தாமான் ஸ்ரீ ரம்பையிலுள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள், ஐந்து நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம் என நம்பப்படும் இரண்டு பெண்களின் சடலங்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டன.
குறித்த சந்தேகத்திற்கிடமான கார் தொடர்பில் நேற்று மாலை 5.30 மணியளவில் ஒரு வழிப்போக்கர் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, பெர்டா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது என்று, பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அங்குவந்த மீட்புக் குழுவினர் சிறப்புக் கருவிகளைப் பயன்படுத்தி காரை வெற்றிகரமாகத் திறந்தனர்.
காரின் உள்ளே, முன் இருக்கைகளில் இரண்டு இளம் பெண்களின் உயிரற்ற உடல்களைக் கண்டதாகவும், பின்னர் மேலதிக விசாரணைக்காக வழக்கு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது” என்றும் செய்தித் தொடர்பாளர் நேற்று இரவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
20 வயதிற்குட்பட்டதாக நம்பப்படும் இரண்டு பெண்களும் இறந்து ஐந்து நாட்களுக்கும் மேலாகியிருக்கலாம் என்றும், ஏனெனில் அவர்களின் உடல்கள் வீங்கியுள்ளதுடன், அதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதாகவும் அவர் மேலும் கூறினார்.