வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை, அகால மரணத்தை ஏற்படுத்தும் என மருத்துவர் எச்சரிக்கை

புதுடெல்லி: இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் வாரத்திற்கு 70 மணி நேர வேலை ஆலோசனையை ஓலா தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வாலும் ஆதரித்துள்ளார். இம்முறையைப் பின்பற்றினால் “பல தீவிர நோய்க்கான அபாயத்தையும் அகால மரணத்தையும் அதிகரிக்கக்கூடும்,” என்று நரம்பியல் நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

நாராயண மூர்த்தி, கடந்த 2023ஆம் ஆண்டு வயது குறைந்த ஊழியர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கருத்து கூறியிருந்தார்.  இதுகுறித்து அண்மைய நிகழ்வு ஒன்றில் கோடி காட்டிப் பேசியிருந்தார் ஓலா அதிகாரி பவிஷ் அகர்வால்.

இதையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் சுதிர் குமார் சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நீண்ட நேரம் வேலை செய்வது பல தீவிர நோய்களுக்கான கூடாரமாகி விடும். அகால மரணத்தையும் கூட ஏற்படுத்தலாம்,” என்று கூறியுள்ளார்.

பல அறிவியல் ஆய்வுகளை மேற்கோள் காட்டியுள்ள மருத்துவர், வாரத்திற்கு 55 அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் வேலை செய்பவர்களுக்கு ​​பக்கவாதம் ஏற்படும் ஆபத்து 35 விழுக்காடு அதிகம். இதய நோயால் இறக்கும் அபாயம் 17 விழுக்காடு அதிகம் உள்ளது என்றார். வாரத்திற்கு 55 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்வதால் ஒவ்வொரு ஆண்டும் 800,000க்கும் அதிகமானோர் இறக்கின்றனர்.

நீண்ட வேலை நேரம் அதிக எடை, ‘டைப் 2’ நீரிழிவு போன்ற ஆபத்துகளையும் அதிகரிக்கிறது. இது பல நோய்கள், ஆரம்பகால மரணத்திற்கு முன்னோடியாகும். வாரத்தில் 40 மணிநேரம் வேலை செய்பவர்களைவிட வாரத்திற்கு 69 அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் வேலை செய்பவர்கள் கடுமையான மனச்சோர்வு அறிகுறிகளைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறினார்.

முதலாளிகள் தங்கள் நிறுவனத்தின் லாபம், சொத்துமதிப்பை அதிகரித்துக்கொள்ள ஊழியர்களுக்கு நீண்ட வேலை நேரத்தைப் பரிந்துரைக்க முனைகிறார்கள். இதுபோல் செய்வது ஏற்புடையது அல்ல என்று நரம்பியல் நிபுணர் சுதிர் குமார் மேலும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here