ஒகேனக்கல்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால், கர்நாடகாவிலுள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணை பாதுகாப்பு கருதி இரு நாட்களுக்கு முன், வினாடிக்கு, 16,750 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 2,257 கன அடி என மொத்தம் வினாடிக்கு, 19,007 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர், நேற்று மாலை, 5:30 மணியளவில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வர தொடங்கியது.
அங்குள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கணக்கீட்டின் படி காலை, 10:00 மணிக்கு வினாடிக்கு, 4,500 கன அடியாக இருந்த நீர்வரத்து மாலை, 6:30 மணிக்கு, 12,000 கன அடியாக அதிகரித்தது.
நீர்வரத்தால், ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, மெயின் பால்ஸ், சினி பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், கர்நாடக அணைகளில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுஉள்ளது.
நேற்று மாலை, கபினி அணையிலிருந்து, 25,000 கன அடியும், கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 556 கன அடி என மொத்தம், 25,556 கன அடி உபரி நீர், காவிரியாற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி கலெக்டர் சாந்தி கூறுகையில், ”ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்க, இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்படுகிறது.
”மேலும், காவிரி கரையோர மக்கள் இரவு நேரங்களில் கரையை கடப்பதையும், கால்நடைகளை ஆற்றங்கரைக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,” என்றார்.