திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மின்தூக்கிக்குள் 59 வயது ஆடவர் ஒருவர் இரண்டு நாள்களாக சிக்கிக்கொண்டு அவதிப்பட்டார். திருமலை அருகே உள்ள ஒரு நகர்ப் பகுதியைச் சேர்ந்தவரான ரவீந்திரன் நாயர், சனிக்கிழமை மின்தூக்கிக்குள் சிக்கிக்கொண்டதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
சனிக்கிழமையன்று நாயரின் குடும்பத்தினர் அவரைக் காணவில்லை என்று புகார் அளித்ததாக தகவல்கள் கூறின. அவரது கைப்பேசி பழுதடைந்ததால், மின்தூக்கியில் இருந்தபடி யாருடனும் அவரால் தொடர்புகொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து காவலர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.




















