*தேர்தல் இல்லாத பொதுப் பேரவை
*தலைவர்கள் சமரசம் – உறுப்பினர்கள் உற்சாகம்
*தங்க கணேசன் பெருமிதம்
மலேசிய இந்து சங்க வரலாற்றில் 2024 ஜூலை 13 ஆம் நாள், ஒரு பொன்னான நாள் என்று சங்கத்தின் தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தெரிவித்தார்.
மலேசிய இந்துப் பெருமக்களின் மறுமலர்ச்சி-இந்து சங்கத்தின் எழுச்சி என்னும் இரு அம்சங்களை முன்னிறுத்தி சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷானுடன் சமரசம் கண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சங்க வரலாற்றில் ஒரு புதிய மைல் கல் என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கு முழு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கிய டத்தோ மோகன் ஷானுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தங்க கணேசன் குறிப்பிட்டார்.
இந்து சங்கத்தின் 47-ஆவது தேசிய பொதுப் பேரவை வரும் ஜூலை 21-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமைஜெஞ்ஜாரோம், பண்டார் சௌஜானா புத்ரா, மாஹ்சா பல்கலைக்கழகத்தில் நடைபெற இருக்கிறது.
ஆண்டுப் பொதுப் பேரவையில் மத்திய செயலவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒன்பது பேருக்கான வேட்புமனு சமர்ப்பிப்பு கடந்த ஜுலை13 ஆம் தேதி சனிக்கிழமை மலேசிய பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மலேசிய இந்து சங்க தலைமையகத்தில் நடைபெற்றபோது பத்து பேர் களமிறங்கினர்.
அவர்களில் ஒருவர் தன்னுடைய வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றதால், ஏனைய ஒன்பது பேரும் போட்டியின்றி தேர்வு பெற்றதாக, தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றிய வழக்கறிஞர் திருமதி சகுந்தலா நாராயணசாமி அறிவித்தார்.
முன்னதாக, மலேசிய இந்து சங்கத்தின் இந்நாள் தலைவர் தங்க கணேசனும் முன்னாள் தலைவர் டத்தோ மோகன் ஷானும் கலந்துரையாடி, மலேசிய இந்து சங்கத்தின் நலன் கருதி போட்டியின்றி சங்கத்தை வழிநடத்த வேண்டும் என்று ஒருமனதாக முடிவெடுத்ததன் அடிப்படையில், ஆண்டுப் பொதுப் பேரவையில் வழக்கமாக இடம்பெறும் தேர்தல் இவ்வாண்டு தவிர்க்கப்பட்டுள்ளது.
இதனால், பல்லாயிரக் கணக்கான ரிங்கிட் மிச்சப்பட்டுள்ளதுடன், வீண் உழைப்பும் கால விரயமும் தவிர்க்கப்பட்டுள்ளது என்று தங்க கணேசன் மேலும் கூறினார்.
இந்த ஆண்டு மத்திய செயலவைக்கு பரமேஸ்வரி த/பெ இராமசாமி, டத்தோ மருதைவீரன் த/பெ செர்பமால், பாலகிருஷ்ணன் த/பெ பரசுராமன், கணமூர்த்தி த/பெ அரிகிருஷ்ணன், டாக்டர் லலிதா த/பெ இராமசாமி, விநாயகமூர்த்தி த/பெ சுப்பிரமணியன், சத்திவேல் நாயுடு த/பெ சண்முகம், சிவநாதன் த/பெ சுப்பிரமணியன், மகேந்திரன் த/பெ முருகன் ஆகிய ஒன்பது பேர் புதிதாக தேர்வு பெற்றனர்.
தேசியத் தலைவர் ஸ்ரீகாசி சங்கபூசன் தங்க கணேசன், துணைத் தலைவர் கணேஷ் பாபு ஆகியோர் தலைமையில் வேட்பு மனு சமர்ப்பிப்பு முன்னதாக நடைபெற்றது.
இந்த ஆண்டு தேசிய பொதுப் பேரவையை மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் மு. சரவணன் காலையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கவிருக்கிறார் என்றும் தங்க கணேசன் மேலும் சொன்னார்.