இந்தோனேசியாவில் முதலீடு செய்வோருக்கு 5, 10 ஆண்டுகள் ‘கோல்டன் விசா’

ஜகார்த்தா:

வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கத்தில் நீண்ட கால விசா திட்டத்தை இந்தோனேசியா வியாழக்கிழமை (ஜூலை 25) அறிமுகப்படுத்தியுள்ளது.

10 மில்லியன் அமெரிக்க டாலர் வரையில் முதலீடு செய்வோருக்கு 10 ஆண்டு விசா வழங்கப்படும் என்று அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்துள்ளார்.

ஒருவர் ஐந்தாண்டு “கோல்டன் விசா’ பெற 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிறுவனத்தைத் தொடங்க வேண்டும். 10 ஆண்டு விசாவுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய வேண்டும்.

நிறுவனம் தொடங்க விரும்பாதவர்கள் முறையே 5 ஆண்டு, 10 ஆண்டு விசா பெற 350,000 டாலர், 700,000 டாலர் பணத்தை இருப்பில் வைக்க வேண்டும். இந்தப் பணத்தை இந்தோனேசிய அரசாங்கப் பத்திரங்கள், பொது நிறுவனப் பங்குகள் அல்லது வங்கிச் சேமிப்புகளுக்குப் பயன்படுத்தலாம்.

நிறுவன இயக்குநர்கள், ஆணையர்களுக்கு ஐந்து ஆண்டு விசா பெற விழையும் முதலீட்டாளர்கள் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய வேண்டும். 10 ஆண்டு விசாவைப் பெற 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய வேண்டும்.

போர்னியோ தீவின் காடுகளில் 32 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கட்டப்பட்டு வரும் புதிய தலைநகரான நுசாந்தராவில் முதலீடு செய்தால் சலுகை உண்டு. 5 மில்லியன் டாலர் முதலீட்டுக்கு 5 ஆண்டு விசாவும் 10 மில்லியன் டாலர் முதலீட்டுக்கு 10 ஆண்டு விசாவும் வழங்கப்படும் என்று குடிநுழைவு அமைப்பு தெரிவித்துள்ளது.

பல நாடுகள் இதேபோன்ற முதலீட்டு விசாத் திட்டங்களை வழங்குகின்றன. ஆனால் கனடா, பிரிட்டன், சிங்கப்பூர் உட்பட சில நாடுகள் அவற்றை ரத்து செய்துவிட்டன. அத்தகைய முதலீடுகள் வேலைகளை உருவாக்குவதில்லை என்பதுடன் அவை ஊக பணத்தைத் திரட்டுவதற்கான ஒரு வழியாக இருக்கலாம் என அந்நாடுகள் கருதுகின்றன.

இந்த விசா “நல்ல தரமான பயணிகளை” ஈர்க்கும் நோக்கம் கொண்டது என்று ஜோகோ விடோடோ கூறினார்.

2023ஆம் ஆண்டில் இந்த விசா அனுமதி வழங்கப்படத் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 300 விண்ணப்பதாரர்களுக்கு இந்தோனீசியா தங்க விசாக்களை வழங்கியுள்ளது. இது 123 மில்லியன் டாலர்களை ஈர்த்துள்ளது என்று குடிநுழைவு அமைப்பின் தலைவர் சில்மி கரீம் கூறினார்.

இந்தோனேசிய வம்சாவளியைச் சேர்ந்த சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான வழிகள் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். அவர்கள் இந்தோனேசியாவுக்கு காலவரையின்றி வந்து செல்லவும், வேலை செய்யவும், வாழவும் அனுமதிக்கும் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் அனுமதி அட்டை (ஓசிஐ) போன்ற ஒன்றாக அது அமையும். அது அக்டோபருக்குள் வழங்கப்படலாம் என்றும் சில்மி கூறினார்.

இந்தோனேசிய குடிமக்கள் மற்றொரு நாட்டின் கடப்பிதழையும் வைத்திருக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் பரிசீலித்து வருவதாக அந்நாடு சில்மி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here