பெக்கான், ஆக.10-
மலேசிய புள்ளி விவர இலாகா மேற்கொள்ளும் 2024 விவசாயக் கணக்கெடுப்பு இவ்வாண்டு ஜூலை மாதம் 7ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்கியது. விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, வனத்துறை வெட்டுமர நடவடிக்கை உள்ளிட்ட நான்கு துணைப் பிரிவுகளை இந்தக் கணக்கெடுப்பு உட்படுத்தி உள்ளது.
பகாங் மாநில விவசாய புள்ளிவிவர இலாகா ஆணையர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உஸிர் மஹிடின், பகாங் மாநில துணை ஆணையர் (தொழில்நுட்பம்) ரஸமான் ரிட்ஸுவான் ஆகியோரோடு மேற்பார்வையாளர்கள், புள்ளி விவரத்துறை அதிகாரிகளும் பகாங் மாநிலத்தின் தெமர்லோ, குவாந்தான், பெக்கான், பெந்தோங் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜூலை 21 முதல் ஜூலை 23 வரை விவசாயக் கணக்கெடுப்புகள் மேற்கொள்ள களமிறங்கினர்.

இந்தக் காலகட்டத்தில் விவசாய உற்பத்தியாளர்களும் அமைப்பினரும் இந்நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். பெக்கான் கம்போங் மானிஸ் என்ற இடத்தில் நான்கு ஏக்கர் நிலத்தில் பல்வேறு வகையான விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள புவான் ஷரிஃபா யுஸ்னிடாவும் அதில் அடங்குவார். தொட்டிகளில் மீன் வளர்ப்பது, ஆடு- மாடுகளை வளர்ப்பது, செம்பனை நடவு செய்வது உள்ளிட்ட பல்வேறு விவசாய உற்பத்திகளில் ஷரிஃபா முனைப்போடு ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பகாங் மாநில மீன் வளத்துறை இயக்குநர் அப்துல்லா பின் ஜபாரும் மாநில விவசாயத் துறை உதவி ஆணையர் என்ற வகையில் இந்த நடவடிக்கையில் கலந்துகொண்டார்.
விவசாயம், பூர்வக்குடி மேம்பாட்டுத்துறை, மாவட்ட நில அலுவலகம் ஆகியவற்றின் வாயிலாக முன்னதாகவே 11 மாவட்டங்களில் பகாங் மாநில புள்ளி விவரத்துறை 2024ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பை மேற்கொண்டது. அதன் வாயிலாக பல்வேறு ஒத்துழைப்புகளும் பெறப்பட்டதால் விவசாய புள்ளி விவரக் கணக்கெடுப்பு விவரங்கள் சுமூகமாகக் கண்டறியப்பட்டன.

2024 விவசாயப்புள்ளி விவரக் கணக்கெடுப்பு மிக இன்றியமையாத ஒன்றாகும். உண்மை விவரங்களைக் கொண்ட போட்டியாற்றல் வாய்ந்த ஏற்புத்தன்மை கொண்ட விவரக் குறிப்பு தளத்தை தோற்றுவிப்பதற்கு இதுமிக அவசியமானது. தரமான அளவீட்டு முறையின் அடிப்படையில் சீரான பாரம்பரியமான ஒரு மதிப்பீட்டு முறையை உருவாக்கவும் அனைத்துலக நிலையிலான விவரங்களை ஒப்பீடு செய்து பார்க்கவும் குறைந்த அளவிலான வளங்களே இருப்பினும் விவசாய வளர்ச்சித் திட்டங்களுக்கு உறுதுணையாக அவை முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் சவால்களை எதிர்கொள்வதோடல்லாமல் விவசாய வளப்பங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட மிகத் துல்லியமான கொள்கை, வியூகங்களை வகுக்கவும் இந்தப் புள்ளி விவரங்கள் மிக அவசியமானவை.
இந்தக் கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில் விவசாயத் துறைக்குத் தேவையான குறிப்பாக பகாங் மாநில அரசாங்கத்தின் விவசாய உற்பத்திக்குத் தேவையான புள்ளிவிவரத் தகவல்களை வகைப்படுத்திட இயலும். மாநில விவசாயத் துறை வளர்ச்சியின் இலக்கை இதன்வழி எளிதாக நிர்ணயிக்கலாம். மேலும் ஒருங்கிணைந்த ஒரு விவசாய புள்ளிவிவர மையத்தை ஏற்படுத்துவதற்கும் இது உறுதுணையாக அமைகிறது. விவசாயத்துறையில் வளம் பெற்ற ஒரு நாடாக மலேசியாவை உருவாக்கும் அரசாங்க இலக்குக்கும் இது மிக இன்றியமையாததாக விளங்குகிறது.

இந்த 2024ஆம் ஆண்டு விவசாயப் புள்ளி விவரக் கணக்கெடுப்பு வெற்றிகரமானதாக அமைந்திட விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள குடும்பங்கள், கழகங்கள், அமைப்புகளின் ஒத்துழைப்பு மிகவும் தேவைப்படுகிறது. ஆகவே, நாடு முழுவதும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் இந்தப் புள்ளிவிவரக் கணக்கெடுப்புக்கு முழு ஒத்துழைப்பை நல்கவேண்டியது அவசியமாகிறது. ஜூலை 7ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 10ஆம் தேதி வரையில் இந்தக் கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்படும்.
www.myagricensus.gov.my என்ற மலேசிய புள்ளி விவர இலாகா அகப்பக்கத்தின் வாயிலாகவோ 2024 விவசாயப் புள்ளிவிவரக் கணக்கெடுப்பு ஃபேஸ்புக் பக்கத்தின் www.facebook.com/bancipertanian2024 வாயிலாகவோ இதுபற்றிய மேல் விவரங்களை அறியலாம்.





















