டில்லிராணி முத்து
செகிஞ்சான், ஆக. 16-
பாரிட் அம்பாட், சுங்கை பூரோங்கில் அமைந்துள்ள காந்திஜி தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டிற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் தொடர்ந்து துணை நிற்போம் என இப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கப் பொறுப்பாளர்கள் அனைவரும் உறுதியளித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாரிட் அம்பாட், சுங்கை பூரோங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற 52ஆம் ஆண்டு ஆடித் திருவிழாவில் கலந்து கொண்ட காந்திஜி தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் இந்த வாக்குறுதியை தந்தனர்.

தமிழ்ப்பள்ளிகளின் புறவளர்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்கம் சிறந்த பங்களிப்பை வழங்க முடியும் என்ற நோக்கிலும் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சி, முன்னேற்றம், பள்ளி மேம்பாட்டினையும் கருத்தில் கொண்டும் அரசாங்கத்தின் விதிமுறைகளுக்கேற்ப கடந்த 2022ஆம் ஆண்டு காந்திஜி தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.
தற்போது 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இந்த காந்திஜி தமிழ்ப்பள்ளியைத் தொடர்ந்து தற்காக்க வேண்டி பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து முன்னாள் மாணவர் சங்கம் மும்முரமாகவும் முழு மூச்சாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் திருவிழாவின்போது ஆலய வளாகத்தினுள் காந்திஜி தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகத்தினர் கூடாரம் அமைத்து குலுக்கல் சீட்டு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

அக்குலுக்கல் சீட்டு நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் பணத்தை காந்திஜி தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் வழங்கி வருகின்றனர்.
கடந்தாண்டுகள் போல் இவ்வாண்டு திருவிழாவின்போதும் மூன்றாவது ஆண்டாக காந்திஜி தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகத்தினர் குலுக்கல் சீட்டு நிகழ்ச்சியை நடத்தியதோடு காந்திஜி தமிழ்ப்பள்ளியின் முன்னேற்றத்திற்கு 2000 ரிங்கிட்டை நன்கொடையாக வழங்கினர்.
மேலும் இப்பள்ளியில் சிறந்த தேர்ச்சி பெற்று கல்வியில் சிறந்து விளங்கும் 18 மாணவர்களுக்கு 1000 ரிங்கிட் செலவில் பள்ளி புத்தகப்பை, பள்ளி உபகரணங்கள் ஆகியவற்றையும் வழங்கினர்.

இப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க பல முயற்சிகளை முன்னெடுப்பதோடு கோலசிலாங்கூர் மாவட்டத்திலும், சிலாங்கூர் மாநில நிலையிலும் காந்திஜி தமிழ்ப்பள்ளியைச் சிறந்த தமிழ்ப்பள்ளியாக உருவாக்கிட முன்னாள் மாணவர் சங்கம் பெரும் பாடாற்றும் என்றும் அதன் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
இக்குலுக்கல் சீட்டு நிகழ்ச்சி நனிச்சிறந்த முறையில் நடைபெறுவதற்கு காந்திஜி தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்திற்கு பணமாகவும், பொருளாகவும் உதவிகள் வழங்கிய நன்கொடையாளர்களுக்கு அதன் நிர்வாகத்தினர் தங்களின் நெஞ்சார்ந்த நன்றியை பதிவு செய்துக் கொண்டனர்.
மேலும் இப்பள்ளியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் நன்கொடை வழங்கிய காந்திஜி தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்திற்கு, காந்திஜி தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கண்ணகி பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.




















