ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் பெரும்பாலும் டெலிகிராம் தான் பயன்படுத்தப்படுகிறது. ரஷ்யா, உக்ரைன் மத்தியில் போர் நிலவி வருவது நாம் அனைவரும் அறிந்ததே.
‘டெலிகிராம்’. இந்த செயலியைப் பயன்படுத்தாத, தெரியாத இளைஞர்கள் குறைவு என்றே சொல்லலாம். ஆனால் உலகம் முழுவதும் தற்போது டெலிகிராமுக்கு எதிரான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
ரஷ்யா, உக்ரைன் இந்த இரு நாடுகளும் போர் குறித்த தகவல்களை டெலிகிராம் மூலம்தான் தங்களுக்குள் பகிர்ந்துகொள்கிறார்கள். ஏற்கெனவே இந்த குற்றச்சாட்டு டெலிகிராம் மீது இருந்துவந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி டெலிகிராமின் தலைமை நிர்வாக அதிகாரி பாவேல் துரோவை பிரான்ஸைச் சேர்ந்த குழந்தைகள் உரிமை பாதுகாப்பு நிறுவனம் கைது செய்தது. இதற்குக் காரணமாக டெலிகிராமில் போதை மருந்து கடத்தல் தகவல்கள், குழந்தைகளின் பாலியல் வன்கொடுமை புகைப்படங்கள் ஆகியவைப் பகிரப்படுவதாகவும், பாவேல் துரோவ் சைபர் சட்டங்களைப் பின்பற்றவில்லை எனவும் கூறப்பட்டது.
உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் டாப் இளம் தொழில் முனைவோர்களில் ஒருவர் பாவேல் துரோவ் (வயது 39). இவரது சொந்த நாடு ரஷ்யா. டெலிகிராமுக்கு முன்பு, இவர் ரஷ்யாவில் பிரபல சோசியல் மீடியா நிறுவனமான விகொன்டாக்டேவை (VKontakte) தொடங்கி நடத்தி வந்துள்ளார்.
இந்த நிறுவனத்தில் உள்ள அரசுக்கு எதிரான குழுக்களைத் தடை செய்யுமாறு ரஷ்ய அரசு வைத்த கோரிக்கையை நிராகரித்துவிட்டு, இவர் 2014-ம் ஆண்டு ரஷ்யாவிலிருந்து துபாய்க்குச் சென்றுவிட்டார். இந்த பிரச்னை நடப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பே, அதாவது ஆகஸ்ட் 2013-ம் ஆண்டு பாவேல் துரோவ் டெலிகிராமை அறிமுகப்படுத்திவிட்டார். டெலிகிராம் தலைமையகம் துபாயில் இயங்கி வருகிறது.
வாட்ஸ்ஆப் போல டெலிகிராமும் ஒரு மெசேஜிங் ஆப். ஆனால் வாட்ஸ்ஆப்பை விட, டெலிகிராமில் வசதிகள் மிக மிக அதிகம். வாட்ஸ் ஆப்பில் ஒரு குழுவில் 1,024 நபர்கள் மட்டும் தான் இணைய முடியும். ஆனால் டெலிகிராமில் 2 லட்சம் பேர் வரை ஒரு குழுவில் இருக்கலாம். வாட்ஸ்ஆப்பில் 16 MB அளவு வரையிலான ஆவணங்கள், வீடியோக்கள், புகைப்படங்கள் அனுப்ப முடியும் என்றால், டெலிகிராமில் 2 GB வரையிலான ஆவணங்கள், வீடியோக்கள், புகைப்படங்கள் அனுப்ப முடியும். இந்த ப்ளஸ்களால் பலரும் டெலிகிராமை பயன்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர்.
‘என்னோட பேர் வெச்சு யாராவது டெலிகிராம்ல பேசுனா நம்பாதீங்க’ என்று சமீபத்தில் பல சோசியல் மீடியா இன்புளுயன்சர்கள் வீடியோ வெளியிட்டுப் பார்த்திருப்போம். இந்த போலிக் கணக்குகளின் முக்கிய நோக்கமே ‘நிதி மோசடி’தான். மேலே குறிப்பிட்டுள்ள நிதி மோசடி, போதைப் பொருள் கடத்தல் தகவல்கள், குழந்தைகளின் பாலியல் வன்கொடுமை புகைப்படங்கள் பகிர்வுகளைத் தாண்டி டெலிகிராமில் தீவிரவாதம், தகவல் கசிவு, ஹேக்கிங், திருட்டு, ஏமாற்று வேலை என நிறைய நடந்து வருகின்றன.
பாவேல் துரோவ் கைதுக்குப் பின்பு, இந்தியாவின் மத்திய உள்துறை மற்றும் மத்திய தகவல் தொழில்நுட்ப துறையும் டெலிகிராம் குறித்த விசாரணையில் இறங்கியுள்ளன. ஒருவேளை இந்த விசாரணையில் டெலிகிராம் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்தியாவில் டெலிகிராம் செயலி தடை செய்யப்படும்.
‘இது தான் கொல்கத்தா மருத்துவர் பாலியல் வன்கொடுமை வீடியோ’ எனத் தவறான ஒரு வீடியோ டெலிகிராமில் பரவிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி தவறுகள் மற்றும் சைபர் கிரைம்களின் புகலிடமாக டெலிகிரமாக இருப்பதுதான் இந்தியாவுக்கான பிரச்னை. உலக நாடுகளின் பிரச்னையும் கூட.
டெலிகிராம் நிறுவனம் தங்களது தலைமை நிர்வாக அதிகாரியின் கைது குறித்து வெளியிட்ட அறிக்கையில், “சமூக வலைத்தளத்தில் பகிரப்படும் தகவல்களுக்கு, அந்த வலைத்தளத்தின் நிறுவனரைக் காரணமாக்குவது அபத்தமானது.” என்று தெரிவித்துள்ளது.
பாவேல் துரோவ் கைதானதிலிருந்து எலான் மஸ்க் அவருக்கு ஆதரவு தெரிவித்துத் தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தொழில் முனைவர் விவேக் ராமசாமி, “இன்று டெலிகிராம். நாளை எக்ஸ்.” என்று ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட்டுக்கு, ‘100 சதவிகிதம் சரி’ என எலான் மஸ்க் பதிலளித்துள்ளார். மேலும் எலான் மஸ்க் தனது தனி ட்வீட்டில், “2030-ல் ஐரோப்பாவில் ஒரு மீமை லைக் செய்தால் கூட தூக்கிலிடப்படுவார்கள்” என எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
தற்போது பாவேல் துரோவ் ஐக்கிய அமீரகம் மற்றும் பிரான்ஸின் குடிமகனாகத் தான் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் இன்னமும் ரஷ்யா அவரைத் தங்களது நாட்டுக் குடிமகனாகத் தான் முன்னிலைப்படுத்தி வருகிறது. இதற்கு, “பாவேல் துரோவுக்கான சட்ட உதவிகளை பிரான்ஸ் செய்தே தீர வேண்டும்.” என்று எச்சரிக்கை விடுத்துள்ளதே சாட்சி. மேலும், ரஷ்யாவின் வெளியுறவுத் துறை, “தூரோவிடம் பேச தங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளது.





















