“மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தவருடன்” திருமணம் -நார்வே இளவரசி எடுத்த முடிவு!

ஓஸ்லோ: நார்வே இளவரசி மார்த்தா லூயிஸ், “மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தவர்” என்று கூறிக்கொள்ளும் ஷாமன் எனப்படும் ஆன்மீக குருவை இந்த வார இறுதியில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். மிஸ் லூயிஸ் மற்றும் அவரது அமெரிக்க காதலர் டுரேக் வெரெட் ஆகியோர் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான ககேராங்கர் என்ற இடத்தில் உள்ள அழகிய கடலோரங்களுக்கு மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரைவேட் விழாவில் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர்.

வெரெட் என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஆன்மீக ஆலோசகர், இவரை பின்பற்றுவோரில் கவினேத் பேல்ட்ரோ மற்றும் அன்டோனியோ பந்தரஸ் போன்ற பிரபலங்கள் உள்ளனர். புற்றுநோய், பெண்களின் பாலியல் விஷயங்களில் இவர் கூறிய கருத்துக்கள் சர்ச்சையாகியுள்ளன. நார்வேயின் பத்திரிகையாளர் டாக்ஃபின் நோர்ட்போவால், இந்த ஆன்மீக குரு வெரெட் ஒரு சர்க்கஸ், குறும்புக்காரன் என்று அடைமொழி வைத்து விமர்சிக்கும் அளவுக்கு அங்கு, நிலைமை உள்ளது.

இதனிடையே இந்த திருமண கொண்டாட்டங்கள் அலேசுண்ட் என்ற இடத்தில் உள்ள ஒரு பாரம்பரிய ஹோட்டலில் “மீட் அண்ட் கிரீட்” நிகழ்ச்சியுடன் தொடங்கியது, அங்கு சுவீடிஷ் அரச குடும்பத்தினர் மற்றும் அமெரிக்க தொலைக்காட்சி பிரபலங்கள் உட்பட நூற்றுக்கணக்கான விருந்தினர்கள் இந்த ஜோடியின் திருமணத்தை கொண்டாட திரண்டனர். திருமண நிகழ்ச்சியில் ககேராங்கர் செல்லும் அழகிய படகு பயணமும் அடங்கும், அங்கு இந்த ஜோடி தங்கள் திருமண உறுதிமொழிகளை (vows) பரிமாறிக்கொள்ள இருக்கிறார்கள்.

52 வயதான இளவரசி மார்த்தா லூயிஸ், நார்வே மன்னர் ஹரால்ட் V இன் மூத்த மகள் ஆகும். ஒரு காலத்தில் பந்தய குதிரை வீராங்கனையாகவும் கலக்கியவர். இவரை விட வயது குறைந்த, அதாவது, 49 வயதான வெரெட், ஒரு ஹாலிவுட் ஆன்மீக குரு ஆவார்.

2020 ஆம் ஆண்டு வேனிட்டி ஃபேர் இதழுக்கு அளித்த பேட்டியில், டுரேக் தனது 28 வயதில் தான் இறந்ததாக பகிர்ந்து கொண்டார். அவர் காய்ச்சல், உறுப்பு செயலிழப்பு போன்ற பாதிப்பால் வெறும் நான்கு நிமிடங்கள் மரண நிலையை அடைந்து மீண்டதாக கூறி பரபரப்பை கிளப்பியவர். இந்த தீவிரமான தருணத்தில், தீப்பிழம்பு கத்திகள் தன்னை குத்துவதை உணர்ந்ததாகவும், தனது பாட்டியின் ஆவி தன்னை விட்டுவிட சொல்லி கத்தியதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார். அதாவது ஏசுநாதரை போல உயிர்த்தெழுந்ததாக மறைமுகமாக அவர் கூறினார்.

அதோடு விடவில்லை. “தாயாரின் கருப்பை”க்கு மறுபடியும் போனதாக உணர்ந்ததாகவும், அங்கு அவர் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் மீண்டும் அனுபவித்ததாகவும் தெரிவித்திருந்தார். மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்ட பிறகு, வெரெட் இரண்டு மாதங்கள் மயக்கத்தில் இருந்தார் மற்றும் 2012 ஆம் ஆண்டு வரை எட்டு ஆண்டுகள் டயாலிசிஸ் செய்து கொண்டிருந்தார், இதை பார்க்க முடியாத அவரது சகோதரி அவருக்கு சிறுநீரகத்தை தானம் செய்தார். இதன்பிறகு நார்மல் வாழ்க்கைக்கு திரும்பினார் வெரெட்.

இதனால் அரச குடும்பத்திற்கு இந்த திருமணத்தில் முழு மனது இல்லையாம். இந்த சர்ச்சைக்கு மத்தியிலும், நார்வேயின் சிம்மாசனத்திற்கு நான்காவது வரிசையில் உள்ள இளவரசியான மார்த்தா லூயிஸ் பிடிவாதமாக திருமணத்திற்கு ரெடியாகிவிட்டார். 2019 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் இளவரசி மார்த்தா லூயிஸ் தனது காதலர் டுரேக் வெரெட்டை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். இளவரசி மார்த்தா முன்னதாக எழுத்தாளர் ஆரி பெஹனுடன் திருமணம் செய்திருந்தார், இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உண்டு. ஆரி பெஹன் 2019 ஆம் ஆண்டு, அதாவது இளவரசியுடனான விவாகரத்துக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here