கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு தினசரி பல்வேறு திருப்பங்களை சந்தித்து வருகிறது. கைதாகியுள்ள சஞ்சய் ராய் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதனால் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில், சம்பவம் நடந்த அன்றைய தினம் இரவு மருத்துவமனையில் என்ன நடந்தது என்று சிபிஐ அதிகாரிகளிடம், சஞ்சய் ராய் அதிர்ச்சி தகவலை சொல்லியுள்ளார்.மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவருக்காக நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சஞ்சய் ராய்க்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு, சிபிஐ விசாரணை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் தினசரி பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
தொடக்கத்தில், “நான்தான் பாலியல் கொலை செய்தேன். என்னை தூக்கிலிடுங்கள்.” என்று சஞ்சய் ராய் கூறினார். வழக்கு தீவிரமடைய.. தீவிரமடைய அவரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. திடீரென,“எனக்கும், இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் ஒரு அப்பாவி.” என்று அப்படியே டிவிஸ்ட் அடித்தார். சம்பவம் நடந்த அன்றைய தினம், சஞ்சய் ராய் மிகவும் சகஜமாக இருந்ததாக அவனின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். சிபிஐ அதிகாரிகளும், “சஞ்சய் ராய் சிறிது கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் சம்பவத்தை அப்படியே கோர்வையாக கூறுகிறான்.” என்று சொல்லியிருந்தனர். மிருக குணம், ஆபாச வீடியோக்கள் என்று சஞ்சய் குறித்து வெளியாகி வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. சிறையில் கூட சஞ்சய் ராய், “எனக்கு தினமும் ரொட்டி வேண்டாம். முட்டை நூடுல்ஸ் தான் வேண்டும்.” என்று அதிகாரிகளிடம் அடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில் சஞ்சய் ராய் சிபிஐ அதிகாரிகளிடம், “என்னுடைய நண்பரின் சகோதரர் ஆர்.ஜி கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆகஸ்ட் 9ம் தேதி இரவு, நான் அவரை சந்திப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போது அவருக்கு ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. அருகில் மருத்துவர்கள் இல்லை. அதனால் மருத்துவர்களை தேடி மேல் தளத்துக்கு சென்றேன். அங்கு செக்யூரிட்டிகள் இல்லை.
மருத்துவரை தேடி எதேர்ச்சையாக மூன்றாவது தளத்தில் உள்ள செமினார் ஹாலுக்கு சென்றேன். வேறு எந்த நோக்கத்திலும் அங்கு செல்லவில்லை. அங்கு ஒரு பெண் படுத்திருந்தார். எனக்கு அவர் யார் என்று தெரியாது. நான் அவரை எழுப்பியபோது எந்த அசைவும் இல்லை. இதனால் நான் பயந்து அங்கிருந்து வெளியேறிவிட்டேன். அப்போதுதான் ப்ளூடூத் கீழே விழுந்தது.” என்று கூறியுள்ளார். ஆனால், சஞ்சய் ராயின் வாக்குமூலத்தில் சிபிஐ அதிகாரிகளுக்கு சந்தேகம் உள்ளது. ஆகஸ்ட் 8ம் தேதி காலை 11 மணியளவிலும் சஞ்சய் ராய் அந்த மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் சக மருத்துவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சஞ்சய் அந்த பெண் மருத்துவரை உற்று பார்த்தபடி சென்றுள்ளார். இதனால் மருத்துவரை தெரியாது என்று சஞ்சய் சொன்னது நம்பும்படியாக இல்லை. “இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.” என்று சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.