கனடாவிலிருந்து கால்நடையாகவே அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், கனடா செல்லும் பயணிகள் இங்கிலாந்தில் புகலிடம் கோருவதும் கவனத்துக்குரிய பிரச்சினையாகி உள்ளது.
ஏறக்குறைய 9,000 கிலோ மீட்டர் நீளமான அமெரிக்க-கனடா எல்லை உலகின் மிக நீளமான திறந்த எல்லையாகும். இது மெக்சிகோ எல்லையை விட இரு மடங்கு நீளமானது. சீனா- இந்தியாவின் 3,400 கி.மீ. எல்லையின் நீளத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம்.
அமெரிக்க சுங்கத்துறை, எல்லைப் பாதுகாப்புத் தரவுகளின்படி, 2024 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் கனடாவுடனான அமெரிக்க எல்லையில் பிடிபட்ட இந்தியர்களின் சராசரி மாதாந்திர எண்ணிக்கை 47% அதிகரித்துள்ளது. 2023ன் 2,548 என்ற எண்ணிக்கையிலிருந்து 3,733 ஆக அதிகரித்துள்ளது. 2021ன் 282 ஆக இருந்த எண்ணிக்கையை விட 13 மடங்கு அதிகமாகும்.
அமெரிக்காவில் சட்டபூர்வமாக குடியேறிய இந்திய மக்களின் அதிகரித்து வரும் பொருளாதார செல்வாக்கும் அவர்களின் மொத்த எண்ணிக்கைக்குமான மாறுபட்ட நிலையில் இந்த எண்ணிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. உதாரணமாக, பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் அண்மைய ஆய்வின்படி, அமெரிக்க மக்கள் தொகையில் இந்திய அமெரிக்கர்கள் 1.5%. ஆனால் அனைத்து வருமான வரிகளிலும் 5-6 விழுக்காட்டை அவர்கள் செலுத்துகின்றனர்.
இதற்கிடையே, 2021ல் 495 ஆக இருந்த இங்கிலாந்தில் தஞ்சம் கோரும் இந்தியர்கள் எண்ணிக்கை 2022ல் 136% அதிகரித்து 1,170 ஆனது. 2023ல் அது 1,319 உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு, ஜூன் வரை 475 புகலிடக் கோரிக்கையாளர்கள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் குறிப்பிடத்தக்க அளவினர், இங்கிலாந்தை நிறுத்தமிடமாக கொண்டு, கனடாவிற்கு பயணிப்பவர்கள் என அறியப்படுகிறது. இது குறித்து கனடாவிடம் அமெரிக்காவும் இங்கிலாந்தும் கவலை தெரிவித்துள்ளன. விசா நடைமுறைகளை அமெரிக்கா மிகவும் கடுமையாக்கியுள்ள நிலையில், கனடாவுக்குச் செல்லும் அனைத்து இந்திய மக்களும் இடைநிறுத்த நாடுகளுக்கும் விசா பெற வேண்டும் என்று இங்கிலாந்து முன்மொழிந்துள்ளதாக அறியப்படுகிறது.
இங்கிலாந்து உள்துறை அமைச்சு முறைகேடுகளைத் தடுக்க உறுதி பூண்டுள்ளது. கனடா அகதிகள் பாதுகாப்புப் பிரிவின் (RPD) தரவுகளின்படி, இந்திய நாட்டவரிடமிருந்து 2023ல் பெறப்பட்ட 9,060 புகலிடக் கோரிக்கைகளுடன் ஒப்பிட, இந்த ஆண்டு முதல் காலாண்டில் பெறப்பட்ட 6,056 கோரிக்கைகள் மிக அதிகமாகும்.
வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதற்காக 2017ல் கனடா விசா கொள்கையைத் தளர்த்தியதிலிருந்து இந்த உயர்வு தொடங்கியது. 2016க்கும் 2022க்கும் இடையில், கனடாவில் அனைத்துலக மாணவர்களின் எண்ணிக்கை 61% அதிகரித்து 523,971 இலிருந்து 844,444 ஆக உயர்ந்துள்ளதாகவும், அவர்களின் ஒட்டுமொத்த செலவினம் $15.5 பில்லியனில் இருந்து $37.3 பில்லியனாக உயர்ந்துள்ளதாகவும் அதிகாரபூர்வ பதிவுகள் காட்டுகின்றன.
இங்கிலாந்தில் புகலிடம் கோரும் முதல் ஐந்து நாட்டினரில் இந்தியர் உள்ளனர். 2018க்கும் 2023க்கு இடையில், இங்கிலாந்தில் புகலிடம் கோரிய இந்தியர்கள் எண்ணிக்கை 11 மடங்கு அதிகரித்துள்ளது.