இன்று 2024, செப்டம்பர் 28 ஆம் நாள் உலக செய்தி தினம் ஆகும். 2018 ஆம் ஆண்டு உலக செய்தி தினம் அறிமுகம் செய்யப்பட்டது.
செய்தி தினம் – ஜனநாயகத்தின் தூண், உண்மையின் உறைவிடம், மக்கள் நம்பிக்கையின் ஆணிவேர்.
நான்கு திசைகளில் இருந்து திரட்டப்படும் செய்திகளை அதன் உண்மைத் தன்மை மாறாமல் மக்களுக்கு தருவது தான் ஒரு செய்தியாளனின் தார்மீக கடமை.
ஒரு செய்தியால் ஒரு நாட்டை உருவாக்க முடியும். அதே போல் ஒரு செய்தியால் ஒரு நாட்டை அழிக்கவும் முடியும். அணுசக்தியை விட வலிமை மிக்கது செய்தி.
செய்தியாளர்கள் மக்களின் உயர் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள். நம்பிக்கைக்குரிய செய்திகள், தகவல்கள் ஆகியவற்றை மக்களுக்கு தரும் மிகப் பெரிய பொறுப்பு செய்தியாளர்களுக்கு உண்டு.
ஒவ்வொரு நாளும் சமச்சீரான செய்திகளை மக்களுக்கு வழங்கும் பொறுப்புடமையும் செய்தியாளர்களுக்கு உண்டு.
இன்றைய தகவல் சகாப்தத்தில் இணையத்தள சமூக ஊடகங்கள் செய்தித் துறைகளில் ஊடுருவி மாபெரும் சவாலாக உருவெடுத்து வருகின்றன. உண்மைக்கும் பொய்க்கும் இடையே பெரும் போரே நடந்துக்கொண்டிருக்கிறது.
உண்மைக்கு புறம்பாக செய்திகளை அள்ளிக் குவித்துக்கொண்டிருக்கும் இணையத்தள சமூக ஊடகங்களோடு சமர் செய்து மக்களுக்கு நம்பகமான செய்திகளையும் தகவல்களையும் செய்தியாளர்கள் வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.
உண்மைக்குப் புறம்பான செய்திகளால் ஏற்படக் கூடிய பூகம்பங்களையும் மிரட்டல்களையும் முறியடித்து உண்மை செய்திகளை தருவது செய்தியாளர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.
ஆனால், ஜனநாயகத்தையும் மக்களையும் காப்பாற்றுவதற்கு தங்களுக்கு இன்னமும் வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் செய்தியாளர்கள் செயல்பட்டுக்கொண்டிருப்பதை கண்கூடாக காண முடிகிறது.
நம்பகத் தன்மை மிக்க செய்திகளை தொடர்ந்து வழங்குவதற்கு ஆண்டுக்கு ஒரு முறை என்றில்லாமல் தினமும் செய்தி தினம் அனுசரிக்கப்பட வேண்டும். இதன் வழி ஜனநாயக நடைமுறைகள் காக்கப்படும்.
உண்மையான செய்திகளை வழங்குவதில் செய்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், சிக்கல்கள் தொடர்பில் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய நோக்கத்தை கொண்டது தான் அனைத்துலக செய்தி தினம்.
அனைத்து செய்தியாளர்களுக்கும் இன்றைய தினம் ஒரு கண் திறப்பாக இருக்கட்டும். ஜனநாயகத்தை காக்கும் தூணாக இருப்போம்.
பி.ஆர்.ராஜன்
ஆசிரியர்,
மக்கள் ஓசை நாளிதழ் – டிஜிட்டல் மீடியா