பி.ஆர்.ராஜன்
2005ஆம் ஆண்டில் எஸ்பிஎம் படிப்பை முடித்த ருத்ரகணேஷ் த/பெ. ரெங்கேஸ்வரன் (வயது 35) ஒரு நிறுவனத்தில் சாதாரண வேலையில் அமர்ந்தார். நீர்க்குழாய்களைப் பொருத்துவது, பழுதுபார்ப்பதுதான் அவரது வேலையாக இருந்தது.
கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் அந்தத் தொழிலில் அவர் ஈடுபட்டிருந்தார். முன்னேற்றத்திற்கான எவ்வித அறிகுறியும் அவருக்குத் தென்படவில்லை. திறன் பயிற்சி சான்றிதழ் இல்லாததால் துணிந்து சம்பள உயர்வும் கேட்க முடியவில்லை. அனுபவம் மட்டுமே அவருக்கு இருந்தது.
இந்நிலையில் தன்னுடைய தந்தை ரெங்கேஸ்வரன் சாத்தையா CIDB நிறுவனத்தில் பணியில் சேருமாறு தமக்கு ஆலோசனை கூறினார் என்று ருத்ர கணேஷ் தெரிவித்தார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதற்கு ஏற்ப CIDB நிறுவனத்தில் பணியில் சேர்ந்த நாள் முதல் தன்னுடைய வாழ்க்கையில் புதிய உருமாற்றத்தை காணத்தொடங்கியதாக அவர் சொன்னார்.
2005 முதல் 2008ஆம் ஆண்டு வரை அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த அவர், 2009ஆம் ஆண்டு CIDB நிறுவனத்தின் தொழில்திறன் பயிற்சி நிறுவனமான Akademi Binaan Malaysia (ABM) இளைஞர் திட்டத்தில் பங்கேற்றதாக அவர் குறிப்பிட்டார்.
நீர்க்குழாய்களைப் பொருத்துவது, பழுதுபார்ப்பது, சானிட்டரி துறைகளில் முதல்கட்டப் பயிற்சியை தாம் பெற்றதாகக் கூறினார். இங்கு தாம் நான்கு கட்டப் பயிற்சிகளை முடித்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
2009 அக்டோபர் 29,30 ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற 18ஆவது மலேசிய திறன் போட்டியில் நீர்க்குழாய் பொருத்தும் பிரிவில் கலந்துகொண்ட தான் 2ஆவது நிலையில் வெற்றி பெற்றதாகவும் சொன்னார்.
ABM இளைஞர் பயிற்சித்திட்டம் மிகப் பெரிய ஒரு மாற்றத்தை எனக்குக் கொண்டு வந்தது. நீர்க்குழாய் பழுதுபார்ப்பு, பொருத்தும் துறையில் கிடைத்த சான்றிதழ் தன்னை ஒரு முதலாளியாக உருவாக்கியது என்று ருத்ரகணேஷ் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார்.
2009ஆம் ஆண்டு ABM மத்திய பிராந்திய இளைஞர் திட்டத்தில் பங்கேற்றேன். இங்கு பயிற்சியை முடித்ததும் சொந்த நிறுவனத்தை அமைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். சிறு சிறு அளவிலான தொழில்களில் ஈடுபட்டேன். நீர்க்குழாய்களைப் பழுதுபார்ப்பது, புதிதாகப் பொருத்துவது போன்ற பணிகள் புதிய நம்பிக்கையைத் தந்தன.
நான் அந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் இன்றளவும் மற்றவர்களிடம்தான் சம்பளத்திற்கு வேலை பார்த்துக்கொண்டிருப்பேன். ABM எனக்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தந்தது. 2012ஆம் ஆண்டில் ருத்ரா டிரேடிங் என்ற கம்பெனியை ஆரம்பித்தேன். அதன் இயக்குநரான என்னுடைய நிறுவனம் கட்டட நிர்மாணிப்பு, வீடுகள் புதுப்பிப்பு, நீர்க்குழாய் பொருத்துதல் போன்ற பணிகளை முன்னெடுத்தது.
இன்று 14 தொழிலாளர்களுடன் ஒரு முதலாளியாக நான் இருக்கிறேன். ABM முன்னாள் மாணவர்களும் என்னிடம் வேலையில் சேர்ந்தனர். அவர்களில் சிலர் இப்போது முதலாளிகளாக மாறியிருக்கின்றனர். என்னுடைய இந்த வெற்றியின் பின்னணியில் ABM இருப்பது எனக்கு மிகப் பெரிய ஒரு பலமாக உள்ளது.
இன்று பல்வேறு கட்டுமானத் துறைகளில் எனக்கு வாய்ப்புக் கிடைத்துவருகிறது. கட்டட நிர்மாணிப்புகளில் குழாய்கள் பொருத்தும் பணி பெரிய அளவில் எனக்கு பெயர் வாங்கித் தந்திருக்கிறது. பெரிய நிறுவனங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் அப்பணியை என்னிடம் ஒப்படைக்கின்றனர்.
இத்தொழிலைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் புதிய பாடங்களைக் கற்று வருகிறேன். என்னுடைய தொழில்திறன் நாளுக்கு நாள் புதிய பரிணாமத்தைக் கண்டு வருகிறது. ஆண்டுக்காண்டு என்னுடைய ருத்ரா டிரேடிங் நிறுவனம் சிறந்த வளர்ச்சியைக் கண்டு வருகிறது.
செராஸ், காஜாங், பந்தாய் டாலாம், செந்தூல் போன்ற பகுதிகளில் வீடு கட்டும் குத்தகைகளும் வீடுகளைப் புதுப்பித்துக்கட்டும் பணிகளும் கிடைத்துவருவது என்னுடைய தொழில்திறனுக்குக் கிடைத்த பரிசு என்று நான் மனதார நம்புகிறேன் என்று செராஸில் குடியிருக்கும் ருத்ரகணேஷ் குறிப்பிட்டார்.
இவர் 2014ஆம் ஆண்டு கம்போங் பாண்டானில் கார் கழுவும் பட்டறையையும் தொடங்கி இன்றளவில் வெற்றிகரமாக அதனை நடத்தி வருகிறார்.
ரெங்கேஸ்வரன் – புஷ்பராணி தம்பதிக்குப் பிறந்த 5 பிள்ளைகளில் ருத்ரகணேஷ் மூன்றாவது பிள்ளையாவார். தன்னுடைய தொழில் அபரிமித வளர்ச்சி கண்டதைத் தொடர்ந்து தன்னுடைய தங்கை லாவண்யாவை மருத்துவத்துறையில் படிக்க வைத்து அதற்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டார். டாக்டர் லாவண்யா தற்போது புத்ராஜெயா மருத்துவமனையில் பணி செய்கிறார்.
ரத்னாதேவியை தன்னுடைய மனைவியாகக் கரம்பிடித்த ருத்ரகணேஷிற்கு இரண்டு பிள்ளைகள். ஒருவர் தான்ஷிகா, மற்றொருவர் தவனேஷ். இன்று தன்னுடைய குடும்பம் நிறைவான மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு ABM தான் முக்கியக் காரணம் என்பதை மறவாமல் நினைவு கூர்கிறார் ருத்ர கணேஷ்.
வாழ்க்கையில் இன்று ஓரளவு செல்வச் சிறப்புடன் வாழ்ந்தாலும் பழைய வாழ்க்கையை அவர் சற்றும் மறக்கவில்லை என்பதற்கு அவரின் தான, தர்மங்கள் சான்றாக உள்ளன. தன்னால் இயன்ற உதவிகளை ருத்ரகணேஷ் வழங்கி வருகிறார்.
கஷ்டப்படும் அண்டைவீட்டார், உறவினர்கள் ஆகியோருக்குத் நம்முடைய இந்திய இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு ABM இளைஞர் திட்டத்தில் பங்குபெற்று வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள் என்று அவர் ஆலோசனை கூறினார்.
கட்டுமானத்துறை சார்ந்த வெல்டிங், வயரிங், நீர்க்குழாய் பொருத்துதல், பழுதுபார்த்தல், கான்கிரிட் கம்பி கட்டுதல், சானிட்டரி, சிமெண்டு பூசுதல் போன்ற பயிற்சிகளில் கற்றுத் தேர்ந்து சான்றிதழ் பெற்றால் வேலைச் சந்தையில் வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன என்பதையும் ருத்ரகணேஷ் சுட்டிக்காட்டினார்.