இங்கிலாந்து: ஓஷோ என்று அழைக்கப்படும் ரஜினீஷின் வழிபாட்டின் கீழ் வளர்க்கப்பட்ட இங்கிலாந்து பெண் ஒருவர் தான் அனுபவித்த பாலியல் கொடுமைகள் குறித்து கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குச்வாடாவில் பிறந்த ஓஷோவின் இயற்பெயர் சந்திரமோஹன் ஜெயின்.
பல்வேறு மதங்கள், சித்தாந்தங்கள் பற்றி நாடு முழுவதும் பிரசங்கம் செய்து வந்தார். அவருடைய சொற்பொழிவு அனைத்து மக்களையும் கவர்ந்திழுக்கும் வகையிலும், ஆளுமைத் தன்மை கொண்டதாகவும் இருந்தது. தொடர்ந்து நவசன்யாச என்ற இயக்கத்தை தொடங்கிய அவர் தனது பெயரை ஓஷோ என்று மாற்றிக் கொண்டார்.
அமெரிக்காவில் உள்ள ஓரேகானில் குடியேறி ஆசிரமத்தையும் அமைத்தார். ஆன்மிகம் மட்டும் பேசாமல் அரசியல், ஆகியவற்றை இணைத்துப் பேசி வந்தார். ஓஷோவை பின்பற்றுபவர்கள் உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கானோர் இருந்தனர். 1970களில் நிறுவப்பட்ட ரஜினீஷ் வழிபாட்டு வழிமுறை மேற்கத்திய நாட்டினரை மிகவும் ஈர்த்தது. புனேவில் தனது ஆன்மிக இயக்கத்தை நிறுவுவதற்கு முன்பு ஓஷோ ஒரு தத்துவ விரிவுரையாளராக இருந்தார்.
ஓஷோவின் வழக்கத்துக்கு மாறான தியான முறைகள், பாலியல் சுதந்திரம் மீதான முக்கியத்துவம் ஆகியவை அவருக்கு இந்தியாவில் செக்ஸ் குரு என்ற பெயரையும் பெற்றுத் தந்தது. நூற்றுக்கணக்கான குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், இதுவரை அதற்கான ஆவணங்கள் இல்லை.
இந்நிலையில், யுகேவைச் சேர்ந்த 54 வயதான பெண் பிரேம் சர்கம் என்பவர் ஓஷோவின் பாலின வழிபாட்டில் தனக்கு ஏற்பட்ட வேதனையான அனுபவங்கள் குறித்தும், துறவிகளின் சமூகத்தில் ஆறு வயதில் இருந்து தான் அனுபவித்த பாலியல் கொடுமைகள் குறித்தும் அவர் விவரித்துள்ளார்.
சர்கமின் தந்தை புனேவில் உள்ள ஆசிரமத்தில் சேருவதற்காக இங்கிலாந்தில் இருந்து தனது மனைவி, மகளை விட்டுவிட்டு ஆன்மிக அறிவொளியை நாடிச் சென்றுள்ளார். அந்த வழிபாட்டு முறைக்குள் சர்கமும் ஈர்க்கப்பட்டுள்ளார். அப்போது, அவரை பெயரை மாற்றிக் கொள்ளவும், ஆரஞ்சு நிற ஆடைகளை அணியவும், பாலியல் சுதந்திரத்திற்கு குழந்தைகள் தடையாகப் பார்க்கும் ஒரு தத்துவத்தை பின்பற்றுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தன்னுடைய ஏழு வயது முதல் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானதாகவும், 12 வயதில் கற்பழிப்பு வரை சென்றதாகவும் கூறிய அவர், அப்போது தனக்கு மிகுந்த குழப்பமும், அமைதின்மையும் இருந்தது. எதோ ஒரு விசித்திரமான காரியத்தை செய்கிறோம் என்று நினைத்தேன். எனது 7 முதல் 11 வயதிலான காலகட்டங்களில் அந்த சமூகத்தில் உள்ள வயது வந்த ஆண்களுடன் பாலியல் செயல்களைச் செய்ய நிர்பந்தித்தனர். இந்த சம்பவங்கள் அதோடு நிற்கவில்லை.
சஃபோல்க்கில் உள்ள மதீனா ஆசிரமத்தில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனர். அங்கேயும் இப்பிரச்னை தொடர்ந்தது. 12 வயதில் அமெரிக்காவிற்குச் சென்று ஒரேகானில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தாயுடன் சேர்ந்தேன்.
16 வயதில் தான் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து எனக்கு முழுமையாகத் தெரிந்தது. ஓஷோ இயக்கத்தினர் குழந்தைகள் பாலுணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். பருவமடையும் பெண்கள் வயதுக்கு வந்த ஆண்களால் வழிநடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் நம்பினர். குழந்தைகள் பாலுணர்வை வெளிப்படுத்துவது நல்லது என்று கருதப்பட்டது.
ஒரேகான் வழிபாட்டு முறை குறித்து அமெரிக்க குழந்தைகள் பாதுகாப்பு சேவைகளால் தனி விசாரணை நடத்தப்பட்டது. விரைவில் வெளியாகவுள்ள சில்ட்ரன் ஆஃப் தி கல்ட் ஆவணப் படம், பாலியல் வழிபாட்டில் இருந்து தப்பிய பிரேம் சர்காம் மற்றும் இரண்டு பிரிட்டிஷ் பெண்களின் கதையைச் சொல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனக்கும், என்னைப் போன்றவர்களுக்கும் என்ன நடந்தது என்பதை உலகம் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.