ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளிவந்து திரையரங்குகளில் வெற்றி நடைப்போட்டு வருகிறது.
இந்நிலையில், அமரன் படத்திற்கும், படக் குழுவினருக்கும் தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுதம் ஏந்திய போலீஸ் படை நலன் மற்றும் மறுவாழ்வு சங்கம் சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தை தலைமை இடமாக கொண்ட இந்த சங்கம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமரன் படத்தில் குறிப்பிட்ட ஒரு காட்சிகளை பார்த்து CRPF வீரர்கள் வேதனை, அதிர்ச்சியும், ஆவேசம் ஆகியவற்றால் மூழ்கியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் அதிகாரியை கொலை செய்ய நடத்தப்படும் தாக்குதல் காட்சிகளில் எவ்வித எதிர்வினையும் வழங்காமல் CRPF வீரர்கள் படுகொலை செய்யப்படுவது மிகவும் இழிவானதாக இருக்கிறது.
CRPF வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் அவமதிப்பதாகவும், அவர்களின் புகழ்மிக்க பணிகளை மரியாதை இன்றி சிதைக்கின்றதாகவும் உணர்த்துகிறது.
படைப்பு, சுதந்திரம் என்ற பெயரில் கற்பனை கொண்டு உருவாக்கி எம்மீது இழிவு கூறும் ஒரு காட்சியை உருவாக்கி மண்ணின் மைந்தர்கள், நாங்கள் ரத்தத்தை சிந்தி நாட்டை காக்கும் போது அதை கேலியாக படம் பிடிப்பது நியாயமா?
நம் 44 RR வீரர்கள் சண்டையிட்டு வீர மரணம் அடைவதை காட்டி அதே நேரத்தில் CRPF வீரர்கள் எந்த எதிர்ப்புமின்றி கொல்லப்படுவதாக காட்டுவது அவர்கள் தியாகத்தை முற்றிலும் கவுரவிக்காமல் கொச்சைப்படுத்துவது போன்று உணர்த்துகிறது.
நாட்டின் பல்வேறு மூளைகளில் இருந்து எந்த பாதுகாப்பும், சலுகைகள் இன்றி போராடி உயிர் தியாகம் செய்த எண்ணற்ற CRPF வீரர்களின் தியாகத்தை இந்த ஒரு காட்சி முற்றிலுமாக அழிக்கக் கூடியதாக உள்ளது.
இந்த படத்தில் பொதுமக்களின் மனதில் CRPF வீரர்களின் மதிப்பை சிதைக்கும் வகையில் உள்ளதால் TN CAPF WARA அமைப்பு தனது கடும் கண்டனத்தை ‘அமரன்’ படக் குழுவிற்கு தெரிவிக்கிறது.
எங்கள் வீரர்களின் தியாகம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்”
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.