கடந்த 26 ஆண்டுகளாக அமலில் இருக்கும் 1998ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு, பல்லூடகச் சட்டத்தில் (சட்டம் 588) செய்யப்பட்ட திருத்தம் நாளை திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இந்தச் சட்டத்தில் உள்ள 233ஆவது ஷரத்தில் சீரமைப்புச் செட்டப்பட்டிருப்பதும் இந்தச் சட்டதிருத்தத்தில் அடங்கும் என்று தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபட்ஸில் கூறினார்.
தொலைத்தொடர்புச் சேவையும் வசதிகளும் துஷ்பிரயோகப் செய்யப்படுவதைத் தடுக்க இந்தச் சட்டதிருத்தம் கொண்டு வரப்படுகிறது. சமூக ஊடகம், தொடர்புத்துறை மேம்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றையும் இந்தச் சட்டதிருத்தம் உள்ளடக்கும் என்று அவர் குறிப்பிட்டார். அதோடு ஆன்லைன் பாதுகாப்புச் சட்ட மசோதாவையும் நாங்கள் கொண்டு வருவோம்.

இணையதளம் இன்னும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக சிறார்களும் குடும்ப உறுப்பினர்களும் இணைய தளத்தை இன்னும் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்ய இந்தச் சட்டங்கள் வகை செய்யும்.
ஆன்லைன் மோசடிகள், ஆன்லைன் மூலம் சூதாட்டம், சைபர் பகடிவதை, சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றச்செயல்கள் போன்றவற்றை ஒடுக்குவதற்கு இந்தச் சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

பந்தாய் டாலாம் கோலாலம்பூரில் நேற்று தொலைத்தொடர்பு நிகழ்ச்சியை நிறைவு செய்தபின் அவர் நிருபர்களிடம் பேசினார்.
























