கடந்த 2022 ஜனவரி மாதம் முதல் விபச்சார நடவடிக்கை தொடர்புடைய 2,444 பதிவுகள், தளங்களைத் தொடர்பு – பல்லூடக ஆணையம், மெத்தா, டெலிகிராம், டிக் டாக் தளங்களின் ஆதரவோடு எதிர்கொண்டுள்ளது.
இதில் பல்வேறு சமூக வலைத்தளப் பக்கங்களில் விபச்சார நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட 279 அகப்பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் 2,165 பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபட்ஸில் தெரிவித்தார். குறிப்பாக ஃபேஸ்புக் பக்கத்தில்தான் அதிக எண்ணிக்கையில் அதாவது 46.84 விழுக்காட்டுப் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து டிக் டாக்கில் 30.44 விழுக்காடு டெலிகிராமில் 21.20 விழுக்காட்டுப் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. பொதுமக்களிடம் இருந்து தொடர்பு பல்லூடக ஆணையம் பெற்ற புகார்கள், அமலாக்கத் தரப்பினரின் அதிகாரப்பூர்வ கோரிக்கைகளின் அடிப்படையில் சட்ட விதிகளை மீறும் பதிவுகள் மீது இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் பதிவுகளை நீக்குவதற்கான இறுதி முடிவு சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளப் பக்க ஏற்பாட்டாளர்களின் பரிசீலனையைப் பொறுத்தது. தாங்கள் நிர்ணயம் செய்துள்ள சமூக விதிகளைப் பின்பற்றி அவர்கள் இம்முடிவை எடுப்பர் என்று நேற்று மேலவை கேள்வி பதில் நேரத்தின்போது ஃபாமி ஃபட்ஸில் குறிப்பிட்டர்.

அதேசமயம் தொடர்பு – பல்லூடக ஆணையம் முன்னெடுக்கும் 1998 தொடர்பு – பல்லூடகச் சட்ட அமலாக்கமானது ஏற்கெனவே வழக்கில் உள்ள சட்டங்களுக்கான ஆதரவு நடவடிக்கை. குறிப்பாக ஆன்லைன் அல்லது டார்சைட்டில் விபச்சார நடவடிக்கை களை எதிர்கொள்வதற்கு இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் டத்தோ போபி சுவான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் குறிப்பிட்டார்.




















