துபாய்:
பொதுமக்கள் கண்டு வியக்கும் வகையில் உலகின் மிகப் பெரிய தங்கக்கட்டி துபாயில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
துபாய் தங்கச் சந்தை விரிவாக்கக் (Dubai Gold Souk Extension) கட்டடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அத்தங்கக் கட்டியை டிசம்பர் 7, 8 என இரு நாள்களில் மட்டுமே காண வாய்ப்பு கிடைக்கும். அதனுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொள்ளலாம்.
இஸ்ஸா அல் ஃபலாசி எமிரேட்ஸ் நாணயச்சாலை அந்த மிகப் பெரிய தங்கக்கட்டியை உருவாக்கியுள்ளது.
300 கிலோவிற்கும் அதிகமான எடையுள்ள அந்தத் தங்கக்கட்டி கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. தேர்ந்த கைவினைத் திறத்திற்கு இது ஒரு சான்றாக விளங்குவதாகக் கூறப்படுகிறது.
தங்கம், நகைச் சந்தையைப் பொறுத்தவரை, உலகளவில் துபாய் முன்னணி வகிக்கும் நிலையில், அதனை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது இந்த ஆகப் பெரிய தங்கக்கட்டியின் உருவாக்கம்.
முன்னதாக, 250 கிலோ எடையில் ஜப்பான் ஒரு தங்கக்கட்டியை உருவாக்கி இருந்தது.