புதுடெல்லி:வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் சிசேரியன் பிரசவங்கள் குறைவாக உள்ளன. நாட்டில் அரசு மருத்துவமனைகளைவிட தனியாா் மருத்துவமனைகளில் அதிக சிசேரியன் பிரசவம் நடைபெறுகிறது. ‘தி லான்செட் பிராந்திய சுகாதாரம்-தென்கிழக்கு ஆசியா’ எனும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த 2019 முதல் 2021 வரையிலான தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, டெல்லியில் உள்ள ‘ஜாா்ஜ் இன்ஸ்டிடியூட் பாா் குளோபல் ஹெல்த்’ நிறுவன ஆராய்ச்சியாளா்கள் இந்த ஆய்வறிக்கையை தயாரித்துள்ளனா். நாட்டின் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் 15 முதல் 49 வயதுடைய 7.2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களின் பிரசவ தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-தேசிய அளவில் சிசேரியன் பிரசவம் மூலம் குழந்தை பிறப்பு விகிதம் 21.5 சதவீதமாகும். பல்வேறு மாநிலங்களில் இந்த விகிதம் கணிசமாக வேறுபடுகிறது. ஒப்பீட்டளவில், நாகாலாந்தில் குறைந்தபட்சமாக 5 சதவீதமும், தெலுங்கானாவில் அதிகபட்சமாக 60.7 சதவீதமும் சிசேரியன் பிரசவ விகிதம் உள்ளது.
பெரும்பாலான மாநிலங்களில் வசதியான குடும்ப பெண்கள் மத்தியில் சிசேரியன் பிரசவம் இரு மடங்கு அதிகமாக உள்ளது. தெலுங்கானா, தமிழகம், ஆந்திரம் போன்ற தென் மாநிலங்களில் சிசேரியன் பிரசவ விகிதம் அதிகமாகவும், வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் பீகாரில் குறைவாகவும் உள்ளது.பொருளாதார வளா்ச்சி, போதிய சுகாதார வசதிகள், அதிக கல்வியறிவு போன்ற காரணிகளுடன் சுக பிரசவம் மீதான அச்சம், வலியற்ற பிரசவம், நல்ல நாளில் குழந்தை பெற வேண்டுமென்ற விருப்பம் ஆகியவையும் சிசேரியன் பிரசவம் அதிகரிப்புக்கு காரணமாகின்றன.
பீகாரை பொருத்தவரை, பெரும்பாலும் வசதி குறைவானவா்களைக் கொண்ட மாநிலம். அங்கு மருத்துவா் சிசேரியனுக்கு பரிந்துரைத்தாலும் குறைவான மருத்துவச் செலவு மற்றும் எளிதில் குணமடைவதைக் கருத்தில் கொண்டு, மக்கள் சுகப்பிரசவத்தையே தோ்வு செய்கின்றனா் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.