வங்காளதேசில் இந்து கோவில், இந்துக்களின் வீடுகள் மற்றும் கடையும் சேதப்படுத்தியதாக நான்கு பேரை அந்நாட்டுக் காவல்துறை நேற்று (டிசம்பர் 14) கைது செய்தது.
கைது செய்யப்பட்ட நால்வரும் 19 வயதுக்கும் 31 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்றும், மேலும் அடையாளம் காணப்பட்ட 12 பேர் தொடர்பில் காவல்துறை விசாரணையை முடுக்கி விட்டுள்ளது என்றும் காவல்துறை கூறியது.
இம்மாதத் தொடக்கத்தில், டிசம்பா் 3ஆம் தேதி சுனாம்கஞ்ச் மாவட்டத்தைச் சோ்ந்த ஆகாஷ் தாஸ் என்பவர் தமது ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய ஒரு தகவலும் சில படங்களும் திடீர் பதற்றத்தை ஏற்படுத்தின. ஒரு சில நிமிடங்களில் அந்தப் பதிவையும் படங்களையும் ஆகாஷ் தாஸ் அகற்றிவிட்டபோதிலும் அதற்குள் உள்ளூரில் ஏராளமானோர் அவற்றைப் பகிர்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து அந்த வட்டாரத்தில் வன்முறை தலைதூக்கியது. கும்பல் ஒன்று அப்பகுதியில் உள்ள லோக்நாத் கோயிலையும் இந்து மக்களின் வீடுகளையும் கடைகளையும் அடித்து நொறுக்கியது.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.
வன்முறைக்குக் காரணமாக ஆகாஷ் தாஸ் கைது செய்யப்பட்டு, அவரைப் பாதுகாக்கும் நோக்கில் சதார் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
வங்காளதேசில் வன்முறைப் போராட்டத்துக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு தப்பி ஓடி இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அரசுக்கு எதிரான போராட்டத்தின்போதும் அது முடிந்த பின்னர் அங்குள்ள சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக வன்முறை நிகழ்ந்து வருவதாக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.