ஜோகூர் பாரு:
இணைய முதலீட்டு மோசடியில் சிக்கி 70 வயதான ஆடை விற்பனையாளர் ஒருவர் சுமார் 2.1 மில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளார்.
வெளிநாட்டு நாணய முதலீட்டு விளம்பரங்களால் கவரப்பட்டு, 70 வயதான அந்த முதியவர் கடந்த நவம்பர் 2024 இல், வாட்ஸ்அப் அன்னியச் செலாவணி முதலீட்டுக் குழுவில் தான் சேர்க்கப்பட்டதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் ஆணையர் டத்தோ எம். குமார் கூறினார்.
அக்குழுவில் உறுதியளிக்கப்பட்ட உடனடி லாபத்தை நம்பிய அவர், கடந்த நவம்பர் முதல் இந்த மாத தொடக்கத்தில் சந்தேக நபரால் இயக்கப்பட்ட பல வங்கிக் கணக்குகளுக்கு 2,118,000 ரிங்கிட் தொகையை செலுத்தினார் என்று 17ஆம் தேதி அளித்த புகாரில் கூறினார்.
பணம் செலுத்தப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்டவர் பதிவு செய்த விண்ணப்பத்தில் தனது முதலீட்டின் நிலையை குறித்த ஒரு செயலி மூலம் பரீட்ச்சித்துப் பார்த்தார். அதில் அவருக்கு சுமார் RM6.2 மில்லியனுக்கும் அதிகமான லாபத்தைப் பதிவு செய்திருந்தது.
உடனே அதிக இலாபம் ஈட்ட எண்ணிய பாதிக்கப்பட்டவர் அந்தப் பங்குகளை மீண்டும் விற்க விரும்பினார். ஆனால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை, அத்தோடு முதலீட்டு லாபத்தை கூடஅவரால் திரும்பப் பெற முடியவில்லை. அதன் பின்னரே தான் மோசடியில் சிக்கியதாக உணர்ந்த அவர் பத்து பஹாட்டில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் என்று கமிஷனர் குமார் கூறினார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 420ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.