கொழும்பு:
அண்மையில் இந்தியாவிற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ விஜயத்தை மேற்கொண்ட இலங்கை அதிபரின் பயணம் இலங்கைக்கு பெரும் அதிர்ஷ்டத்தைக் கொண்டுவந்துள்ளது எனலாம். இந்த பயணத்தின் எதிரொலியாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளில் 33 மேம்பாட்டுத் திட்டங்களுக்காக இந்தியா 2,371 மில்லியன் ரூபாயை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான சமூக-பொருளியல் மேம்பாடு, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இந்த ஏற்பாட்டின் கீழ் இந்தியா கல்விக்காக ரூ.315 மில்லியன், சுகாதாரத்திற்காக ரூ.780 மில்லியன், விவசாயத்திற்கு ரூ.620 மில்லியன், மீன் வளத்துறைக்கு ரூ.230 மில்லியன் என வழங்க உள்ளது.
அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட இந்த முயற்சியின் மூலம் கிழக்கு மாகாணத்தின் உள்கட்டமைப்பு, வளர்ச்சி, உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், அதேநேரம் கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், சுற்றுலா, சமூக மேம்பாட்டுத் துறைகளில் முக்கியமாக மேம்பாட்டுத் திட்டங்கள் இடம்பெறும் என்றும் அவர் மேலும் கூறினார்.