குளியலறையின் கதவு உடைந்ததால் 33வது மாடியில் இருந்து தவறி விழுந்து வெளிநாட்டு மாணவி உயிரிழப்பு

காஜாங்:

குளியலறையின் கதவு உடைந்ததால் 33வது மாடியில் இருந்து தவறி விழுந்து, வெளிநாட்டு மாணவி ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில், குளியலறையின் கதவு உடைந்ததால் பாதிக்கப்பட்டவர் ஜன்னல் வழியாக வெளியேற முயன்றபோது, தவறி விழுந்ததாக நம்பப்படுகிறது என்றும், இந்த சம்பவம் மாலை 6.34 மணியளவில் நடந்ததாக மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் நஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.

19 வயதான பாதிக்கப்பட்டவர், ஒரு பொது பல்கலைக்கழகத்தில் கல்விகற்று வருகிறார் என்றும், 12 வது மாடியின் நடைபாதையில் இரத்த வெள்ளத்தில் ஒரு பெண் கிடப்பதைப் பற்றி ஒருவர் அளித்த புகாரின் பேரில் உடனே காவல்துறை அங்கு வந்ததாகவும், அந்த பெண் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அங்குவந்த மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர் என்றும் அவர் சொன்னார்.

“பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக செர்டாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இன்று நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், உயரத்தில் இருந்து விழுந்ததால் ஏற்பட்ட பல காயங்கள் காரணமாக மரணம் ஏற்பட்டது என்று உறுதிப்படுத்தப்பட்டது.

இவ்வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், வழக்கு பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 017-710 2042 என்ற எண்ணில் பண்டர் பாரு பாங்கி காவல்துறையின் தலைவர் துணை ஆணையர் முகமட் நஸ்ரி டெஸ்னோவைத் தொடர்புகொள்ளலாம் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here