திருச்சூர்:
கடந்த 60 ஆண்டுகாலமாக ரசிகர்களைத் தமது காந்தக் குரலால் கட்டிப்போட்ட புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் பி. ஜெயச்சந்திரன் அவரது 80 ஆவது வயதில் காலமானார்.
கேரள மாநிலத்தின் திருச்சூரில் உள்ள திருச்சூர் அமலா மருத்துவமனையில் வியாழக்கிழமையன்று (ஜனவரி 9) அவரது உயிர் பிரிந்தது. புற்றுநோய்க்காக அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்ததாக கேரள ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
காதல், ஏக்கம், பக்தி என, அனைத்துவகைப் பாடல்களையும் ஆன்மாவைத் தொடும் வகையில் உணர்ச்சி ததும்பப் பாடக்கூடிய அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் 16,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
சிறந்த திரைப்படப் பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது பெற்றவரான திரு ஜெயச்சந்திரன், தமிழக அரசின் கலைமாமணி விருது, நான்கு முறை தமிழக அரசின் சிறந்த திரைப்படப் பின்னணிப் பாடகர் விருது, ஐந்து முறை கேரள அரசின் சிறந்த திரைப்படப் பின்னணிப் பாடகர் விருது எனப் பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.