ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன. இதில் இந்தியாவை தவிர்த்து மற்ற அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை அறிவித்துவிட்டது.
இந்திய அணி எப்போது தனது வீரர்கள் பட்டியலை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியில் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு வீரர் இடம் பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 5 சதங்களுடன் 664 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் இவர் மீது இந்திய அணியின் தேர்வு குழு பார்வை விழுந்திருக்கிறது. அவர் வேறு யாருமில்லை 33 வயதாகும் விதர்பா அணியின் கேப்டன் கருண் நாயர்.
இவர் முன்னதாக இந்திய அணியில் 2016 டிசம்பரில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடியுள்ளார். அந்த தொடரில் ஆட்டம் இழக்காமல் 303 ரன்கள் கொடுத்திருந்தார்.
கடைசியாக அவர் 2017இல் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். தொடர்ந்து சீராக ரன் குவிக்க முடியாததால் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வருவதால் இந்திய அணியில் அவர் இடம்பெற கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 8 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வீரர் அணிக்கு திரும்புவாரா என்பது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.









