இரா.காவியா
கோலாலம்பூர்,
ஜோகூர் பாரு நகரம், மக்கள் நெரிசலை சமாளிப்பதற்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் (JS-SEZ) தொடக்கத்திற்குப் பின், அதிகமான மக்கள் அந்நகரை நோக்கி நகரும் நிலை உருவாக உள்ளது.இந்த புதிய பொருளாதார மண்டலம் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளில் 100 திட்டங்களை உருவாக்கும் இலக்குடன், மலேசியாவின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு,ஒரு மாற்றாக பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த இலக்கை அடைய தற்போது தேவையான பொது போக்குவரத்து அமைப்புகளை திட்டமிடுவதில், நாடு இன்னும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளது. ஜோகூர் பாருவின் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைகள், குறிப்பாக உலகின் மிகப் பெரிய நிலப் போக்குவரத்து வசதிகளில் ஒன்றான கோஸ்வே வழியாக வரும் வாகன நெரிசலால் மேலும் மோசமடைந்துள்ளது. தற்போது தினசரி 3 லட்சம் பேர் இந்த வழியில் பயணம் செய்கிறார்கள், இதனால் சில நேரங்களில் மூன்று மணிநேரம் வரை பயணிகள் நெரிசலில் சிக்கித் தவிக்க வேண்டியுள்ளது.
ஜோகூர் பாருவின் போக்குவரத்து பிரச்சினையை தீர்க்க லைட் ரயில் டிரான்சிட் (LRT) போன்ற நீண்டகாலத் திட்டம் மிகவும் அவசியமானது என மலேசிய ரயில் தொழில்துறை நிறுவனத்தின் (MARIC) தலைவர் கடந்த ஆண்டே கூறியுள்ளார். மேலும், ஜொகூர் பாரு-சிங்கப்பூர் ரேப்பிட் டிரான்சிட் சிஸ்டம் (RTS) . கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் (HSR) போன்ற திட்டங்கள் நகரத்தின் போக்குவரத்துத் தேவையை சமாளிக்க முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன.





















