கோலாலம்பூர்:
அதிகம் படித்தவர்கள்கூட இணைய முதலீட்டு மோசடியில் மிக சாதாரணமாக சிக்கி மில்லியன் கணக்கில் ஏமாற்றப்படுகிறார்கள். குறுகிய காலத்தில் அதிக பணம் பெறலாம் என ஆசைப்படும் இவர்கள் ஏன் முதலீடு செய்யமுன்னர் அதன் நம்பகம் குறித்து பரீட்சித்து பார்க்கத் தவறிவிடுகிறார்கள் என்பது ஆச்சரியம்தான்.
ஒரு தனியார் நிறுவனத்தின் மேலாளர், பேஸ்புக்கில் வெளியான ஒரு விளம்பரத்தை நம்பி முதலீட்டு சலுகையை ஏற்றுக்கொண்டு, அதன்வழி நடந்து RM6.1 மில்லியனை இழந்துள்ளார். K-33 முதலீட்டாளர் கிளப் எனப்படும் இல்லாத முதலீட்டுத் திட்டத்திற்கு பலியாகிய இவர் 64 வயதானவர் என சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் உமர் கான் கூறினார்.
பேஸ்புக் விளம்பரம் மூலம் கவரப்பட்டு, பின்னர் முதலீட்டு குழு பயிற்சியாளரான ரேமண்ட் கோ என்று கூறிக்கொள்ளும் ஒரு நபருடன் இவர் தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் முதலீட்டு வாய்ப்பு குறித்து கவர்ச்சிகரமாக விளக்கப்பட்டு, ஒரு வாட்ஸ்அப் குழுவில் சேர்க்கப்பட்டார், அங்கு அவர் சுமார் இரண்டு வாரங்கள் முதலீட்டு நடவடிக்கைகளில் பங்கேற்றார். சந்தேக நபர் ரேமண்ட் கோ பாதிக்கப்பட்டவரை ‘Digzax.com’ தளத்தில் புதிய முதலீட்டாளராகப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தினார், மேலும் பாதிக்கப்பட்டவர் ஐந்து தனித்தனி வங்கிக் கணக்குகளில் மொத்தம் RM6.1 மில்லியன் மதிப்புள்ள ஒன்பது பணப்பரிமாற்றங்களை செய்துள்ளார்.
பணப்பரிமாற்றங்கள் முடித்த பிறகு, பாதிக்கப்பட்டவர் தனது லாபம் வெள்ளி 28.9 மில்லியனாக பட்டியலிடப்பட்டிருப்பதை அந்த தளத்தில் கவனித்தார். ஆனால் இலாபத்தைத் திரும்பப் பெற முயற்சிக்கும்போது, அந்த நிதியை அணுக பல்வேறு வரிகளைச் செலுத்துமாறு கூறப்பட்டது, அப்போதுதான் டாம் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்டவர் உணர்ந்துள்ளார் என்று ஹுசைன் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில், குறிப்பாக பேங்க் நெகாரா மலேசியா, செக்யூரிட்டீஸ் கமிஷன் ஆல் அங்கீகரிக்கப்படாத செயலிகள் மூலம், நம்பத்தகாத வருமானத்தை உறுதியளிக்கும் முதலீட்டுத் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் எச்சரித்தார்.