சூடான் மருத்துவமனையில் பயங்கரவாத தாக்குதல்; 70 பேர் பலி

சூடானில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், 70 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வட ஆபிரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சி நடக்கிறது. எஸ்.ஏ.எப்., என்றழைக்கப்படும், சூடான் ஆயுதப்படைக்கு அப்தெல் பத்தா அல் – புர்ஹான் என்பவர் தலைமை வகிக்கிறார். இவரது படைக்கும், ஆர்.எஸ்.எப்., என்றழைக்கப்படும், ‘ரேபிட் சப்போர்ட் போர்சஸ்’ எனும் பயங்கரவாத படைக்கும் இடையே 2023ல் போர் துவங்கியது. ஆர்.எஸ்.எப்., பயங்கரவாத குழுவுக்கு பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்கள் ஆதரவு அளித்து வருகின்றன.

இந்நிலையில், சூடானின் வடக்கு டார்பர் பகுதியில் உள்ள மருத்துவமனை மீது ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், 70 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

சூடானில் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுக்கிறோம். சேதமடைந்த மருத்துவ வசதிகளை விரைவாக மீட்டெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here