கோலாலம்பூர்:
கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை 3 (LPT 3) கட்டுமானப் பணிகளுக்கு, RM9.8 பில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், இது பரிசீலனையில் இருப்பதாகவும் இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டம் குறித்து இன்னமும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று பொதுப்பணி துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ அமாட் மஸ்லான் தெரிவித்தார்.
கோல திரெங்கானுவின் கம்போங் கெமுரோ, கிளந்தான் மாநிலத்தின் கோத்தா பாருவிலுள்ள கம்போங் துஞ்சோங்கை இணைக்கும் இந்த டோல் கட்டண விரைவுச்சாலையின் நிர்மாணிப்பு குறித்து விரிவாக மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது என்று விளக்கிய அவர், இந்தத் திட்டத்திற்கான குத்தகை இன்னும் வழங்கப்படவில்லை என்று சொன்னார்.
இது தவிர (LPT 3) விரைவுச்சாலையின் தொடக்கம் முதல் இறுதி வரையிலான பகுதிக்கு விதிக்கப்படும் RM70 டோல் கட்டணம் பொருத்தமானதா என்பதையும் ஆராய வேண்டியுள்ளது, ஏனெனில் தற்போது நாட்டிலுள்ள 33 டோல் கட்டண ஒப்பந்த நிறுவனங்கள் அனைத்தும் இலாபத்தை ஈட்டவில்லை. சில நிறுவனங்கள் இழப்பை எதிர்நோக்கி வருகின்றன என்று அவர் கூறினார்.




















