சட்டவிரோத நாணயப் பரிவர்த்தனை தொடர்பில் எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நடத்தும் புலன்விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சொத்துகளை பிரகடனம் செய்திருக்கிறார். 2021ஆம் ஆண்டு ஆகஸ்டு தொடங்கி 2022ஆம் ஆண்டு நவம்பர் வரையில் இஸ்மாயில் பிரதமராக இருந்த சமயம் விளம்பரம் தகவல்களை பிரசுரம் செய்தல் ஆகியவற்றிக்காக நிதி பெறப்பட்டது – நிதி செலவிடப்பட்டது ஆகியவற்றின் புலனாய்வு முக்கியத்துவம் செலுத்துவதாக எம்ஏசிசி கூறியது. 2009ஆம் ஆண்டு எம்ஏசிசி சட்டம் ஷரத்து 36 (1) கீழ் சொத்துகளை பிரகடனம் செய்ய வேண்டும் என முன்னாள் பிரதமருக்கு 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக சொத்துகளை பிரகடனம் செய்திருக்கிறார்.
கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குமூலம் அளிக்க எம்ஏசிசி அலுவலகத்திற்கு சென்றிருந்தார். மேல் விசாரணைக்காக அவர் மீண்டும் அழைக்கப்படுவதற்கான சாத்தியத்தை எம்ஏசிசி நிராகரிக்கவில்லை. புதிய தகவலும் உளவுத் தகவலும் எம்ஏசிசிக்குக் கிடைத்த பிறகு இஸ்மாயிலின் 4 முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களின் வீடுகளிலும் மேலும் 3 இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு அனைத்துலக நாணயமாக ஏறத்தாழ மலேசிய நாணய மதிப்பில் 170 மில்லியன் ரிங்கிட் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு ஏறத்தாழ 70 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான 16 கிலோ தங்கக்கட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.




















