லஞ்ச ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட யாருக்கும் விதிவிலக்கு கிடையாது. அதே சமயம் எம்ஏசிசி இந்த விவகாரத்தில் பாகுபாடு காட்டாது என்றும் அதன் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி நேற்றுக் கூறினார். செய்தியாளர்களோ அல்லது அரசியல்வாதிகளோ யாராக இருந்தாலும் சரி லஞ்ச குற்றங்கள் புரிந்திருந்தால் அவர்களுக்கு விதிவிலக்கு கிடையாது. லஞ்சம் பெற்றதாக கைதான அந்தச் செய்தியாளர் வசம் 20,000 ரிங்கிட் ரொக்கப் பணம் இருந்ததை கண்டுபிடித்திருக்கிறோம். ஆகவே அவர் லஞ்சம் பெற்றார் என்பதற்கு வலுவான ஆதாரம் எங்களிடம் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இது தவறான செயல் மட்டுமல்ல. லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அது மிகத் தெளிவானது. ஒரு செயலை புரிவதற்கோ அல்லது ஒரு செயலை புரியாமல் இருப்பதற்கோ அதற்கு கைமாறாக யாராவது கையூட்டல் பெற்றால் அது லஞ்சமாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அந்நியத் தொழிலாளர்கள் ஏஜென்ட் விவகாரம் பற்றி செய்தி எழுதிய செய்தியாளரை கைது செய்ததற்கு பதில் அந்நியத் தொழிலாளர் ஏஜென்டுகளும் நாட்டின் நுழைவாயிலில் பணிபுரியும் குடிநுழைவுத்துறை அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கு தொடர்பான புலன் விசாரணைக்கு எம்ஏசிசி முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான் வலியுறுத்தியது குறித்து அஸாம் பாக்கி இவ்வாறு கருத்துரைத்தார்.






















