தென்னிந்திய சினிமாவில் பெண்களை நடனமாடவும், ஆண்களை புகழவும்தான் பயன்படுத்துவார்கள் – நடிகை ஜோதிகா

ஜோதிகா 1997-ல் வெளியான டோலி சஜா கே ரஹ்னா என்ற இந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு இந்தி படங்களில் அவர் நடிக்கவில்லை. தமிழில் 1999-ல் நடித்த வாலி படம் வெற்றி பெற்றதால் தொடர்ந்து தமிழ் படங்களிலேயே நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2006-ம் ஆண்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர்.

‘36 வயதினிலே’ படம் மூலம் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழைத் தொடர்ந்து பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். கடந்த வருடம் பாலிவுட்டில் அவரது நடிப்பில் வெளியான ‘சைத்தான்’ மற்றும் ‘ஸ்ரீகாந்த்’ஆகிய படங்கள் வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் தற்போது ‘டப்பா கார்ட்டெல்’ என்ற வெப்சீரிஸ் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தென்னிந்திய சினிமா குறித்து ஜோதிகா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நேர்காணலில் பேசியிருக்கும் ஜோதிகா, “நான் நிறைய விஷயங்களுக்கு ‘நோ’ சொல்லியிருக்கிறேன். நான் நடிக்க ஆரம்பித்து 10 ஆண்டுகளுக்கு பிறகு… அனைத்து தென்னிந்திய நடிகர்களுடனும் நடித்தப்பிறகு… அநேகமாக என்னுடைய 28 வயதிற்கு பின், நான் சில படங்களுக்கு மட்டுமே ஓகே சொல்லி நடித்தேன். அது மிகவும் கவனமான முடிவு.

தென்னிந்திய சினிமாவில் இருந்து நான் வருகிறேன். அங்கு ஆண்களை முன்னிலையாக கொண்ட படங்கள்தான் அதிகம் வரும். இப்போது மாற்றங்கள் வந்திருக்கின்றன. பாலிவுட்டிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவில் பெரும்பாலும் ஆண்களுக்காக தான் அதிக படங்கள் எழுதப்பட்டிருக்கும். அதில் பெண்கள் கதாப்பாத்திரம் முழுமையடைந்ததாக இருக்காது. அதில் பெண்கள் நடனமாடவும், ஆண்களை புகழவும் தான் பயன்படுத்தப்பட்டு இருப்பார்கள். அது இப்போதும் இருந்துகொண்டு இருக்கிறது. ஆனால் , நான் மாற்று பாதையை தேடினேன்.

அந்த மாதிரியான படங்களும் எனக்கு கிடைத்தன; நான் நடித்தேன். ஆனால், நிறைய படங்களுக்கு ‘நோ’ சொல்லியிருக்கிறேன். நான் என்னுடைய பாதையை கவனமாக தேர்ந்தெடுத்தேன். அது தான் என்னை இப்போது இருக்கும் பாதையில் இயக்கி கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். அதுதான் நான் இப்போது யாராக இருக்கிறேனோ அதுவாக ஆக்கியிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here