பி.ஆர்.ராஜன்
ஆன்லைன் சூதாட்டத்தில் மலேசியர்கள் மிகப்பெரிய தொகையை இழந்து வருகின்றனர். அதேசமயம் வாழ்க்கையையும் தொலைக்கின்றனர்.
வயது கட்டுப்பாடு இன்றி சிறார் முதல் முதியவர்கள் வரை இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவது மிகப்பெரிய சோதனையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. பெண்களும் ஆண்களுக்கு சரிநிகராக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது.
மக்களை இந்த துன்பத்தில் இருந்து காப்பாற்றுவதற்கு மடானி அரசாங்கம் ஓர் உறுதியான நடவடிக்கையை எடுத்திருக்கிறது. ஆன்லைனில் வெளியிடப்படும் தகவல்களின் நம்பகத்தன்மையை வலுப்படுத்துவதற்கு 2025 ஜனவரி 1 ஆம் தேதி முதல் சமூக ஊடகங்கள் லைசென்ஸ் வைத்திருப்பதை கட்டாயமாக்கி இருக்கிறது.
இந்நிலையில் 2022 ஆம் ஆண்டில் இருந்து 2025 பிப்ரவரி 1 ஆம் தேதி வரை 5,026 சூதாட்ட வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. 224,404 தகவல்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.
மக்கள் நலன்களில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் எந்த அளவுக்கு அக்கறை கொண்டிருக்கிறது என்பதற்கு இந்நடவடிக்கை மிகச் சிறந்த சான்றாக உள்ளது.
அரசாங்கத்தின் இந்நடவடிக்கைகள் பற்றி பொது நல நிபுணர்களின் பார்வை என்ன? இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுக் காண்பதில் உள்ள சவால்கள் என்ன? ஆன்லைன் சூதாட்ட தீங்குகள் பற்றி பொது மக்களிடையே குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே போதுமான விழிப்புணர்வு இருக்கிறதா? அரசாங்கத்துடன் இணைந்து இக்கொடிய நோய்க்கு தீர்வுக் காண்பதற்கு பொது மக்கள் எந்த அளவுக்கு தயாராக இருக்கின்றனரா?
சமூக ஊடகங்களை நடத்துபவர்கள் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஆராய்வோம்.
சட்ட அமலாக்கத்தில் உயரிய பதவி வகித்தவரும் ஆன்லைன் குற்றசெயல் விவகாரத்தில் அகண்ட பார்வை கொண்ட ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரியும் சமுதாய நலன்களில் அதீத அக்கறைகொண்ட ஒரு சமூகப் பிரமுகரும் அவர்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் முன் வைத்திருக்கின்றனர்.
டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன்,
(பினாங்கு மாநில முன்னாள் போலீஸ் தலைவர்)
பறவைகள் பலவிதம்…ஒவ்வொன்றும் ஒரு விதம். அப்படித்தான் சூதாட்டங்களும். பல்வேறு ரூபங்களில் சூதாட்டம் இந்த உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.
குதிரைப் பந்தயம், காற்பந்து விளையாட்டுகள், தேர்தல் முடிவுகள் போன்றவை இந்த சூதாட்ட வளையத்தில் உலா வருகின்றன.
இப்போது இந்த நவீன தொழில்நுட்ப சகாப்தத்தில், டிஜிட்டல் மய உலகில் ஆன்லைன் சூதாட்டங்கள் இளையோர், முதியவர், பெண்கள் என பல்வேறு நிலைகளில் இன்று ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கின்றன.
இந்த சூதாட்டத்தில் பணம் தான் பிரதானமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பல கோடி ரிங்கிட்டுகள் கைமாறுகின்றன. கைப்பேசிகள், கணினிகள் வழி இந்த ஆன்லைன் சூதாட்டம் மக்களை சூறையாடிக்கொண்டிருக்கிறது.
இதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குலை நடுக்கத்தை தருவதாக உள்ளன. பணத் தேவைக்காக இவர்கள் சூதாட்டங்களில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக பி40 பிரிவைச் சேர்ந்த ஏழைகள் ஆன்லைன் சூதாட்டங்களில் கையில் இருக்கிற கொஞ்ச நஞ்ச பணத்தையும் இழக்கின்றனர்.
இவர்கள் இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் பைத்தியமாகவே மாறிவிடுகின்றனர்.
கடனாளியாகவும் திருடர்களாகவும் கொள்ளையர்களாகவும் ஆகும் பரிதாப நிலையும் ஏற்படுகிறது. வட்டி முதலைகளிடம் கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் பரிதவிக்கின்றனர்.
பண இழப்பு மட்டும் அன்றி மன நிம்மதியையும் முற்றாக இழக்கின்றனர். தூக்கம் இழந்து, உடல் – மன நலம் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை தொலைத்துக்கொண்டிருக்கின்றனர்.
பலர் குடும்ப வன்முறையில் ஈடுபடுகின்றனர். மனைவி, பிள்ளைகளை அடித்து துன்புறுத்தும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.
இது மட்டும் அன்றி இந்த ஆன்லைன் சூதாட்டம் காரணமாக அவர்களின் சுய தகவல்கள், குறிப்புகள் கசிவினால் அடையாளத் திருட்டு, அதனால் ஏற்படக்கூடிய உயிர் மிரட்டல் போன்றவற்றையும் சந்திக்கும் ஆபத்துகளையும் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம். தைரியம் – மனதிடம் உள்ளவர்கள் இந்த துன்பத்தில் இருந்து விடுபட போராடுகின்றனர். தைரியம் இல்லாதவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
ஆன்லைன் சூதாட்டமும் ஸ்கேம் ஏமாற்றும் செயல்களும் 2028 ஆம் ஆண்டுக்குள் 700 பில்லியன் அமெரிக்க டாலரை தாண்டும் என்று அதிகாரப்பூர்வ ஆய்வுகள் கூறுகின்றன. இது தவிர ஆன்லைன் சூதாட்டம் மூலம் ஆண்டு தோறும் பல கோடி ரிங்கிட் மலேசியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு போகிறது.
சுருக்கமாக சொன்னால் இதன் மூலத்தை இதுவரையில் கண்டுபிடிக்க இயலவில்லை. இதில் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்டிருக்கிறது. இதனை கண்டுபிடிப்பதற்கு நிபுணத்துவம் மிக்கவர்கள் தேவை. இப்போதைக்கு அத்தகைய நிபுணர்கள் நம் நாட்டில் இல்லை.
முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பது போல் அத்துறை சார்ந்த நிபுணர்களின் உதவியை அரசாங்கம் நாட வேண்டும். அதே சமயத்தில் இத்துறை நிபுணர்களை அரசாங்கம் உருவாக்க வேண்டும்.
ஆன்லைன் சூதாட்டம் விளைவிக்கும் கேடுகள்,பணம் – உயிர் இழப்புகள் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரம்ப பள்ளியில் இருந்து தொடங்க வேண்டும். கல்வியில் ஒரு கட்டாய பாடமாக சேர்க்கப்பட்டு ஆரம்ப, இடைநிலை, கல்லூரி, பல்கலைக் கழகம் வரை மாணவர்கள் சிந்தனையில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை விதைக்க வேண்டும்.
டத்தோஸ்ரீ கா.புலவேந்திரன்,
(மலேசிய குற்றத்தடுப்பு அறவாரிய தேசிய உச்சமன்ற உறுப்பினர்)
ஆன்லைன் சூதாட்டம் பற்றிய விழிப்பு நிலை இன்றளவும் அதிக ஆழமாகவும் விரிவாகவும் இல்லை. சமுதாயத்தின் அடிநிலை வரை சென்று சேரக்கூடிய வகையில் விழிப்பு பிரச்சாரங்கள் இருக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் மடானி அரசாங்கம் மிகவும் ஆக்கப்பூர்வமான, விவேகமான நடவடிக்கையை எடுத்திருப்பது மக்கள் நலனில் கொண்டிருக்கும் பரிவையும் அக்கறையையும் மிகத் தெளிவாக காட்டுவதாக உள்ளது.
அரசாங்கத்தின் இம்முயற்சி உச்சபட்ச வெற்றியை பதிவு செய்வதற்கு நாட்டு மக்களும் இளைஞர்களும் நிறைவான ஒத்துழைப்பை நல்கிட வேண்டும். அரசாங்கத்தின் தூதர்களாக ஆன்லைன் ஏற்படுத்தும் பேரழிவு குறித்த விழிப்புணர்வு தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
அரசாங்கம் இந்நோக்கத்திற்காக ஒவ்வொறு மாவட்டத்திலும் இளைஞர் பணிக்குழுவை அமைக்க வேண்டும். அதில் இடைநிலை பள்ளி மாணவர்கள், உயர்கல்வி மாணவர்கள், அரசியல் – சமூக – இளைஞர் அமைப்புக்களின் இளைஞர்கள் ஆகியோரை பங்கேற்க வைக்க வேண்டும். இவர்களுக்கு முறையான பயிற்சிகள் அளித்து களமிறக்க வேண்டும்.
அரசாங்க வானொலி – தொலைக்காட்சி, தனியார் வானொலி – தொலைக்காட்சி ஆகிவற்றில் அனைத்து மொழிகளிலும் தொடர்ச்சியான விழிப்புணர்வு தகவல்கள், பிரச்சாரங்கள் ஒலி – ஒளி பரப்பப்பட வேண்டும்.
அதேபோல் மலாய், தமிழ், சீனம், ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் ஆன்லைன் சூதாட்டங்கள் விளைவிக்கும் இழப்புக்கள் பற்றிய விழிப்புணர்வு தகவல்கள் விளம்பரமாக நாளும் இடம்பெற வேண்டும். இதற்கு அரசாங்கம்
ஒரு குறிப்பிட்ட நிதியை ஒதுக்க வேண்டும்.
60 ஆம் ஆண்டுகளில் தகவல் இலாகா வேன்கள் தோட்டப்புறங்கள், கிராமங்கள், புறநகர் பகுதிகள் ஆகிய பகுதிகளுக்குச் சென்று திரைப் படங்களை திரையிட்டு அதன் ஊடாக அரசாங்கத்தின் செய்திகள், கொள்கைகள், தகவல்கள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.
இந்த அணுகுமுறை மீண்டும் அறிமுகம் செய்யப்பட வேண்டும். நகர்ப்புறம், கிராமப்புறங்கள், புறநகர்கள், முளை முடுக்குகள் என இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தின் உத்தரவுகளை மீறி புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் சமூக ஊடகங்களின் லைசென்ஸ்களை ரத்து செய்து நிரந்தரமாக மூட வேண்டும். அதேசமயம் சட்டத்திற்கு புறம்பான ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிப்பது பற்றியும் அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும். இந்த இரண்டுமே மற்றவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகவும் பாடமாகவும் இருக்க வேண்டும்.