கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமை இழிவுப்படுத்தும் விதமாக காணொலி ஒன்றை TikTok இல் பதிவேற்றம் செய்த ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக 25 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பாச்சோக் மாவட்ட காவல்துறை தலைவர் சூப்பிரிண்டென்டன்ட் முஹமட் இஸ்மாயில் ஜமாலுடின் உறுதிப்படுத்தினார்
46 வினாடிகள் அடங்கிய குறித்த காணொலியில் பிரதமர் அன்வாருக்கு எதிராக விமர்சனங்கள் கூறப்பட்டிருந்தன.
எரிவாயு நிரப்பும் நிலையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வரும் சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 12) கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 504, தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் பிரிவு 233 மற்றும் 1955 சிறு குற்றச் சட்டம் பிரிவு 14 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
அதெ நேரம் சந்தேக நபரின் மொபைல் போனில் நடத்தப்பட்ட சோதனையில் குறித்த வீடியோ மற்றும் பட உள்ளடக்கம் இருப்பது தெரியவந்தது என்று இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பிற குற்றங்கள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அவர் சொன்னார்.
3R (அரச, இனம், மதம்) பிரச்சினைகளைக் கொண்ட உள்ளடக்கத்தைப் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு, குறிப்பாக சமூக ஊடக கணக்கு வைத்திருப்பவர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது, ஏனெனில் அது பொது ஒழுங்கை மீறுவதுடன் மலெசியாவின் பன்முகத்தன்மைக்கு இழுக்காக அமையும் என்றும் அவர் கூறினார்.
























