ஒரு சில வருடத்திற்கு முன்பாக பார்த்தால், வெள்ளிக்கிழமை சாமி கும்பிட வெற்றிலை பாக்கு பழம் கட்டாயம் இருக்க வேண்டும். இந்த தாம்பூலம் வைக்காமல் வெள்ளிக்கிழமை சாமியே கும்பிட மாட்டாங்க.
நம்முடைய வீட்டில் நம்முடைய பாட்டி அந்த வெற்றிலை பாக்கு இல்லாமல் சாமி கும்பிடவே மாட்டாங்க. அக்கம் பக்கம் இருப்பவர்கள் யாவது உதவிக்கு கூப்பிட்டு, வெற்றிலை பாக்கு பழம் வாங்கி வரச்சொல்லி தான் சுவாமி கும்பிடுவார்கள். அது ஒரு காலம். ஆனால் இன்று நம்மால் டெசன் கணக்கில் வாழைப்பழம் வாங்க முடியும், வெற்றிலை பாக்கும் வாங்க முடியும். ஆனாலும் வெள்ளிக்கிழமை அன்று இந்த தாம்பூலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. இன்றைய பணக்கஷ்டத்திற்கு, கடன் சுமைக்கு இதுவும் கூட ஒரு காரணம் என்று சொல்லலாம்.
வெள்ளிக்கிழமை வெற்றிலை பாக்கை வைத்து சாமி கும்பிட்டு, அந்த வெற்றிலையை வீட்டில் யாரும் சாப்பிடுவது கிடையாது, வீணாக காய வைத்து குப்பையில் தான் தூக்கி போடுகின்றோம். இதனால் எதற்கு அந்த வெற்றிலை பாக்கு வாங்க வேண்டும் என்று சில பேர் வெள்ளிக்கிழமை பூஜைக்கு, இந்த வெற்றிலை பாக்கு வாங்குவதை தவிர்த்து விடுகிறார்கள். இனிமே அந்த தவறை பண்ணாதீங்க.
இனி வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில், வெற்றிலை பாக்கு வைத்து சுவாமி கும்பிடுங்கள். சரி, பூஜைக்கு வைத்த அந்த வெற்றிலை பாக்கை என்ன செய்வது. சுவாமி கும்பிட்டு முடித்துவிட்டு, வெள்ளிக்கிழமை இரவு அந்த வெற்றிலை பாக்கை தண்ணீரில் போட்டு வையுங்கள். கிண்ணத்திலோ அல்லது டம்ளரிலோ நல்ல குடிக்கின்ற தண்ணீர் எடுத்து, வெற்றிலை பாக்கு அந்த தண்ணீரில் போட்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் அதில் போட்டு மூடி பூஜையறையிலோ அல்லது வீட்டில் வெளியே ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள்.
மறுநாள் காலை வாசல் தெளிக்கும்போது, அந்த தண்ணீரில், இந்த வெற்றிலை தீர்த்தத்தை கலந்து வாசல் தெளித்து கோலம் போடுவது, வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். இதேபோல இந்த தீர்த்தத்தை தொழில் செய்யும் இடத்திலும் தெளித்து விடலாம். வெற்றிலை தீர்த்தம் நிலை வாசல் படியில் தெளித்தால் வீட்டிற்குள் மகாலட்சுமியின் வருகை இருக்கும். வருமானம் பெருகும். லாபம் பெருகும். வீட்டிற்குள் எந்த ஒரு கெட்ட சக்தியும் நுழைய முடியாது.
வெள்ளிக்கிழமை இந்த வெற்றிலையை தண்ணீரில் போட்டு வைத்தால், மூன்று நாள் தண்ணீரை மாற்றி மாற்றி வையுங்கள். பழைய தண்ணீரை எடுத்து வாசல் தெளிக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான். மூன்று நாட்களுக்கு அந்த வெற்றிலை பாக்கு வாடாமல் இருக்கும். மூன்று நாள் கழித்து அதில் இருக்கும் அந்த வாசமும் சாரும் குறைந்துவிடும். கால்படாத மண் பாங்கான இடத்தில் அதை போட்டு விடலாம்.
வெள்ளிக்கிழமை சுவாமி கும்பிட்ட வெற்றிலையை மேல் சொன்னபடி இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்திப் பாருங்கள். இந்த வெற்றிலை தீர்த்தம் உங்களுக்கு நிச்சயம் வெற்றியை மட்டுமே கொடுக்கும். தேவைப்பட்டால் இந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளித்து விடலாம். இந்த தீர்த்தத்தை கொஞ்சமாக குளிக்கின்ற தண்ணீரில் கலந்து குளித்தாலும், நம்முடைய உடம்பில் இருக்கும் தரித்திரம் நீங்கும். இனிமேல் வெள்ளிக்கிழமை வாங்கும் வெற்றிலை நிச்சயமாக வீணாக போகவே போகாது.
அது மட்டும் இல்லாமல் வாடாமல் இருக்கும் வெற்றிலை வீட்டில் இருந்தால், அது குடும்பத்திற்கு சுபிட்சத்தை தரும். கணவன் மனைவிக்கு ஒற்றுமையை ஏற்படுத்தும் என்பதும் நம்பிக்கை. வெற்றிலையை தனியாக வைத்தால் வாடி போகத்தான் செய்யும். தண்ணீரில் போட்டு அந்த வெற்றிலையை பாதுகாத்து வைத்து பாருங்கள். நிச்சயம் அது மூன்று நாட்களுக்கு வாடாமல் இருக்கும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த ஆன்மீகம் சார்ந்த தகவல் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.